கூடலூர் மண்ணுக்குள் புதையும் வீடுகள்.. வெளியாகாத ஆய்வு முடிவுகள் - பீதியில் மக்கள்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மண்ணுக்குள் புதைந்த வீடுகள் பற்றிய ஆய்வுகள் வெளியிடப்படாததால், பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கூடலூர் நகராட்சிக்குட்பட்ட கோக்கால் கிராம மலைப்பகுதியில், ஒன்றரை மாதம் முன்பு பெய்த கன மழையில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. நாளடைவில் அது பிளவாக மாறி, வீடுகள் மற்றும் அருகில் இருந்த முதியோர் இல்லக் கட்டிடம் ஆகியவை 7 முதல் 8 அடி மண்ணில் புதைந்தன. இதில் வசிப்பவர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். அருகில் உள்ள கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு போன்று இங்கு ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ள நிலையில், நான்கு இந்திய புவியியல் துறை வல்லுநர்கள், அதிநவீன கருவிகளுடன் வந்து, அந்த பகுதியில் 15 நாட்கள் ஆய்வு நடத்தினர். ஆய்வு முடிந்து பத்து நாட்கள் ஆகிய நிலையில், ஆய்வு முடிவுகள் பற்றி தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருப்பது இந்த மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆய்வு முடிவுகளை வெளியிடும்படி அந்த பகுதி மக்கள் கோருகின்றனர்.