தலைநகர் சென்னையில் உயிருக்கே உத்தரவாதம் இல்லாத ஒரு வாழ்வு - எங்கே பாத்ரூம் போவது..குளிப்பது?
தாங்கள் வசித்து வந்த குடிசைகள் இடிக்கப்பட்டதால் வாழ வழியின்றி 7 மாதங்களாக கூடாரம் அமைத்து, கனரக வாகனங்கள் செல்லும் சாலையோரம் ஆபத்தான முறையில் வசிக்கும் இந்த பாவப்பட்ட மக்கள் யார்?...
சென்னை சிந்தாதிரிப் பேட்டை...மேற்கு கூவம் சாலையோரம்.. காக்ஸ் காலனி குடியிருப்பு அருகில் குடிசை போட்டு 30 ஆண்டுக்கு மேலாக வசித்து வருபவர்கள் தான் இவர்கள்...
இப்பகுதியில் கட்டடங்கள் உறுதித் தன்மையை இழந்ததால்... நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கடந்த ஜனவரியில் குடியிருப்புகள் இடிக்கப்பட்டன...
மாற்று இடம் எப்படியும் வந்து விடும் என்ற நம்பிக்கையுடன் அங்கிருந்து பெட்டி படுக்கையெல்லாம் கட்டிக் கொண்டு கிளம்பிய இவர்கள் இதோ சாலையோரம் இப்படி சின்னச் சின்ன கூடாரங்கள் அமைத்து பரிதாபமாய் வாழ்ந்து வருகின்றனர்...
தேங்கியிருக்கும் கழிவுநீர் அருகிலேயே கூடாரங்கள்...மறைக்க தார்ப்பாய்...பழைய துணி தான்.காற்றுக்கோ மழைக்கோ தாங்குமா இதெல்லாம்?...
படுக்கும் இடத்தில் தான் சமையல்...அல்லது வெட்டவெளி சாலையில்...
தங்கள் குடிசையில் இருந்து எடுத்து வந்த உடைமைகளை அடைத்து வைக்க இடமின்றி...இப்படி சாலையோரம் கிடத்தியதில் அத்தனையும் வீணாய் போயுள்ளன...
மாற்று இடத்திற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு விட்டன...அலாட்மென்ட் ஆர்டர் வந்தாகி விட்டது...
ஆனால்...புதிதாக குடிபுகும் இல்லத்திற்கு நான்கரை லட்ச ரூபாய் பணம் கட்ட வேண்டிய சூழல்... ஏழை எளிய மக்களால் உடனடியாக எப்படி பணம் செலுத்த முடியும்?...
பெரும்பாலானோர் தினக்கூலிகள்... நிரந்தர வேலை இல்லை...வாழவே வழியில்லாத சூழலில் வங்கிக் கடன் எப்படி பெற முடியும்?...இருப்பினும் அதிகாரிகள் பேசி வங்கிக் கடன் தர உதவி செய்துள்ளனர்...
இது ஒரு புறம் இருக்க சென்னை மூலக்கொத்தளத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு சொந்தமான ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டி தயார் நிலையில் உள்ளன...
அந்த வீடுகளில் இப்பகுதி மக்களை குடிபெயரச் செய்யலாம் என அதிகாரிகள் முயற்சித்தும் நடக்கவில்லை...
'
மூலக்கொத்தளம் அருகே உள்ள பகுதி வாழ் மக்கள் தங்களுக்கும் அந்த குடியிருப்பில் வீடுகள் வேண்டும் என்பதால் பிரச்சனை செய்து அங்கே குடியிருக்க செல்ல முயல்பவர்களை மிரட்டி திருப்பி அனுப்பி விடுவதாக கூறப்படுகிறது...
கழிவறை வசதி கூட இல்லாததால் பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்...
பச்சைக் குழந்தைகள் பல நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக புலம்பித் தவிக்கின்றனர் பெற்றோர்...
சாலையோரம் வசித்து வரும் மக்கள் அடிக்கடி வாகனங்கள் ஏறி விபத்திற்குள்ளாகும் செய்திகளை தினம் தினம் கடந்து செல்கிறோம்... உயிருக்கே உத்தரவாதம் இல்லாத சூழலில் விரக்தியின் உச்சத்தில் தினம் தினம் நரக வேதனையுடன் வாழ்ந்து வருகின்றனர் இப்பகுதி மக்கள்...
இருந்த வீட்டையும் இழந்து வழிப்போக்கர்களைப் போல் தவித்து வரும் இவர்களுக்கு அரசு விரைவில் நிரந்தர வீடுகள் வழங்கி உதவிட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது...