பிகார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய
லாலு பிரசாத் யாதவ், அண்மைக்காலமாக பிரதமர் மோடி குடும்ப அரசியல் கட்சிகளை விமர்சித்து வருவதாக கூறினார். பிரதமர் மோடிக்கு குடும்பமோ குழந்தைகளோ ஏன் இல்லை என்பதை, முதலில் அவர் தெளிவுபடுத்த வேண்டும் என குறிப்பிட்டார்.
குடும்பமே இல்லாத பிரதமர் மோடி, அதிக குழந்தைகளைக் கொண்டிருப்பவர்களை வாரிசு அரசியல் என விமர்சிப்பதாக லாலு தெரிவித்தார்.
லாலுவின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக தலைவர் நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, பியூஸ் கோயல், அனுராக் தாக்கூர் மற்றும் பாஜக நிர்வாகிகள் தங்களது எக்ஸ் தளத்தில் நாங்கள் மோடியின் குடும்பம் என்று அடைமொழியை சேர்த்து வருகின்றனர். 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பதிவிட்ட இந்த அடைமொழி, தற்போது பேசு பொருளாக இருப்பதோடு, ட்விட்டரிலும் டிரெண்டாகி வருகிறது