பத்மநாப சுவாமி கோவில் விழாவுக்காக, 5 மணி நேரம் விமானங்களை நிறுத்தி, திருவனந்தபுரம் விமான நிலையம் அறிவித்துள்ளது.திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம், பத்மநாப சுவாமி கோவில் அருகே அமைந்து உள்ளது. இந்த கோவிலின் புனித நிகழ்வான, அக்டோபர்-நவம்பர் மாதங்களில் வரும் 'ஐப்பசி ஆறாட்டு' மற்றும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் வரும் பங்குனி விழாவுக்காக, விமான நிலையத்தின் ஓடுபாதை மூடப்பட்டு, விமான இயக்கம் நிறுத்தி வைக்கப்படுகிறது. அந்தவகையில் பத்மநாப சுவாமி கோவிலில் வரும் 9-ந்தேதி 'ஐப்பசி ஆறாட்டு' விழா நடைபெறுகிறது. இதற்காக கோவிலில் இருந்து சாமி சிலைகளை சங்குமுகம் கடற்கரைக்கு ஊர்வலமாக எடுத்து சென்று அங்கு ஆறாட்டு நிகழ்ச்சி (புனித குளியல்) நடத்தப்படுகிறது. இந்த சாமி ஊர்வலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதையை கடந்து கடற்கரைக்கு செல்லும். அதற்காக இந்த ஆண்டு, வரும் 9-ந்தேதி 5 மணி நேரம் விமான இயக்கத்தை நிறுத்தி வைப்பதாக விமான நிலையம் அறிவித்து உள்ளது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த விமான இயக்க நிறுத்தம் அமலில் இருக்கும் என கூறியுள்ளது.