8வது பிரசவம்... அட்மிட் ஆன பெண்…. அடுத்து செய்த சம்பவத்தால் ஷாக்கான ஹாஸ்பிடல்... பரபரப்பு பின்னணி
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே 8வது பிரசவத்திற்கு பயந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பெண்ணை, மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து வந்து அனுமதித்த சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே, மேல் ஆலாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த பிரசாந்த் கூலி வேலை செய்து வருகிறார்..
இவருக்கும் இவரது மனைவி அமுதாவிற்கும் 7 குழந்தைகள் பிறந்த நிலையில் இரண்டு குழந்தைகள் இறந்து போக, தற்போது 5 குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்கள். இந்த சூழலில், 8வது முறையாக கர்ப்பமாகியுள்ளார் அமுதா...
நிறை மாத கர்ப்பிணியான அமுதா, அருகிலுள்ள மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட நிலையில், பிரசவத்திற்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அமுதா அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், தனது 8வது பிரசவத்திற்கு பயந்து போன அவர், யாரிடமும் சொல்லாமல் வெளியேறியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், வருவாய் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், வருவாய் துறையினர் மேல் ஆலாங்குப்பம் கிராமத்திற்கு சென்று, அமுதா பிரசாந்த் தம்பதியருக்கு அறிவுரை கூறி அமுதாவை பிரசவத்திற்காக ஆம்புலன்ஸில் ஏற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.