திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நிதி நிறுவனம் நடத்தி வரும் தங்கராஜ் என்பவருக்கு, கடந்த டிசம்பர் எட்டாம் தேதி அன்று, அடையாளம் தெரியாத செல்போன் எண்ணில் இருந்து, வங்கி கணக்கு வைத்துள்ள வங்கியின் லோகோ பெயர் உள்ளிட்டவையுடன் வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி வந்துள்ளது. அந்த குறுஞ்செய்தியில் உங்களது வங்கி கணக்கு KYC அப்டேட் செய்ய வேண்டும் எனவும் இன்று கடைசி நாள் எனவும் அப்டேட் செய்யாவிட்டால் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும் எனவும் உடனடியாக அப்டேட் செய்யவும் என குறுஞ்செய்தி வந்துள்ளது. இதைத் தொடர்ந்து வங்கியில் இருந்துதான் குறுஞ்செய்தி வந்துள்ளது என நம்பி வாட்ஸப்பில் வந்த லிங்கை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்து அதில் தனது பெயர், பிறந்த தேதி ஆகியவற்றை அவர் பதிவு செய்துள்ளார். சிறிது நேரத்தில் அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து ஆறு பரிவர்த்தனைகளில் 7.47 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் தனது வங்கிக்கு தெரியப்படுத்திய பின், மூன்று மணி நேரம் கழித்து தனது கணக்கை அவர்கள் பிளாக் செய்ததாக தெரிவித்துள்ளார். இது குறித்து திருப்பூர் மாவட்ட சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்த பின், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.