தமிழக அரசுப் பள்ளிகளில் 75 மாணவர்களுக்கு ஒரு கழிவறை என்ற நிலை இருப்பது மத்திய அரசின் புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் அரசு ஆரம்பப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேனிலைப்பள்ளிகள் என ஒட்டு மொத்தமாக 37 ஆயிரத்து 607 பள்ளிகளும், அதில், 46 லட்சத்து 43 ஆயிரத்து 183 மாணவர்களும் படித்து வருகின்றனர். இந்நிலையில், 44 ஆயிரம் கோடி ரூபாய் பள்ளிக் கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்தும், அரசு பள்ளிகளில் போதுமான கழிப்பறைகள் இல்லாதது மத்திய அரசின் புள்ளி விவரங்கள் அம்பலமாகியுள்ளது. தமிழகத்தில், 2022-23 ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளில் மொத்தம் உள்ள 35 ஆயிரத்து 364 மாணவிகளுக்கான கழிவறைகளில், 2023-24 ஆம் ஆண்டில் 35 ஆயிரத்து 331 மட்டுமே பயன்பாட்டில் உள்ளன என்றும், 33 கழிவறைகள் பயன்பாட்டில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல, மாணவர்களுக்கான கழிவறைகள் 2022-23 ஆம் ஆண்டில் 26 ஆயிரத்து 891 ஆக இருந்த நிலையில், அடுத்த ஆண்டில் 26 ஆயிரத்து 874 ஆக குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 75 மாணவர்களுக்கு ஒரு கழிவறை என்ற நிலையே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.