#BREAKING | தமிழகத்துக்கு கனமழை அலர்ட்.. ஆட்சியர்களுக்கு அமைச்சர் போட்ட உத்தரவு..

Update: 2024-11-21 16:13 GMT

இன்று (21.11.2024) நாகப்பட்டினம், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 20 செ.மீட்டர் அளவுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழையினை எதிர்கொண்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள போதுமான உபகரணங்கள் தயாராக உள்ளன. மேலும், மண்டல அளவிலான மீட்பு மற்றும் நிவாரண குழுக்கள் அமைக்கப்பட்டு நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

மேலும், இந்திய பெருங்கடல் மற்றும் அதனை அடுத்துள்ள தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது என்றும், இதன் காரணமாக தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் 23.11.2024 அன்று ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்றும், இது அடுத்த 2 நாட்களில் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, 25.11.2024 முதல் 27.11.2024 வரை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

இதனை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 15 குழுக்களும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 15 குழுக்களும் தயார் நிலையில் உள்ளன.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்

Tags:    

மேலும் செய்திகள்