"ஹெட் மாஸ்ட்டரை மாற்ற வேண்டும்" வெடித்த போராட்டம்...அந்த அளவுக்கு ஆசிரியை செய்த காரியம்?
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியையை மாற்ற வலியுறுத்தி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருக்கண்டலம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியை ஷாமிலி, மாணவர்களை தரக்குறைவாக பேசி வருவதாகவும், இதுகுறித்து பலமுறை பெற்றோர் முறையிட்டும் அதேபோன்ற நடவடிக்கை தொடர்வதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, தலைமை ஆசிரியைக்கு எதிராக வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் பள்ளியின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து பள்ளிக்கு வந்த பெற்றோர், தலைமை ஆசிரியையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல் துறை மற்றும் கல்வித் துறை அதிகாரிகள், உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, பெற்றோர் கலைந்து சென்றனர்.