2 வாரங்களாக போட்ட பிளான்... கிளம்பியதும் ஸ்தம்பித்த சென்னை - கதிகலங்க விட்ட 4 பள்ளி மாணவர்கள்...
கொடைக்கானலுக்கு டூர் போக பிளான் செய்து வீட்டை விட்டு வெளியேறிய நான்கு சிறுவர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடிப்பிடித்த பரபரப்பு சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..
சென்னை ஆவடி அடுத்த அயப்பாக்கத்தை சேர்ந்த சிறுவர் கூட்டம் தான் இந்த ஒட்டுமொத்த பரபரப்புக்கு காரணம்..
11 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்து வந்த நான்கு சிறுவர்களும், டியூசன் முடிந்து இரவு 11 மணி ஆன பின்னரும் வீடு திரும்பாததை அறிந்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்...
உடனடியாக போலீசில் புகாரளிக்கப்பட்ட நிலையில், தனிப்படை அமைத்து களத்தில் இறங்கிய போலீசார், சிறுவர்கள் நால்வரும், ஆட்டோ மூலம் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்று, பின்னர் அங்கிருந்து கொடைக்கானல் நோக்கி பேருந்தில் சென்று கொண்டிருப்பதை சிசிடிவி மூலம் கண்டறிந்திருக்கின்றனர்...
திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்து மாணவர்களை போலீசார் பின் தொடர்ந்ததில், அதிகாலை 6.45 மணியளவில் கொடைக்கானல் அடுத்த வத்தலகுண்டு பேருந்து நிலையத்தில் வைத்து சிறுவர்கள் நால்வரும் பத்திரமாக மீட்டிருக்கின்றனர்.
விசாரணையில், கடந்த 2 வாரங்களாக கொடைக்கானல் சுற்றுலா செல்ல திட்டமிட்டு இருந்ததும், அதற்காக காசு சேர்த்து வந்த நால்வரும், திட்டமிட்ட தேதியில் கொடைக்கானலுக்கு டூர் கிளம்பியதும் தெரியவந்திருக்கிறது..
சிறுவர்கள் நால்வருக்கும் முறையாக கவுன்சிலிங் கொடுத்து, அவர்களின் பெற்றோர்களுக்கும் அறிவுரை வழங்கி போலீசார் அனுப்பி வைத்த நிலையில், புகாரளித்த 8 மணி நேரத்தில் சிறுவர்களை மீட்ட போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது..