ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள நரிப்பையூரைச் சேர்ந்தவர்தான் இந்த அமானுல்லா..
இவருக்கு திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், சாயல்குடியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், பைக் ஒன்றை தவணை முறையில் வாங்கியதாக தெரிகிறது..
கிட்டதட்ட கடனின் பெரும் தொகையை அமானுல்லா செலுத்தியதாகவும், கடைசி சில தவணைகளை மட்டும் குடும்ப சூழ்நிலை காரணமாக அவர் கட்டத் தவறியதால் நேர்ந்த விபரீதமாகவும் அமானுல்லாவின் குடும்பத்தினர் கதறும் கதறல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது...
பணத்தை கட்டிவிட்டு பைக்கை பெற்றுச் செல்லுமாறு கூறி கடந்த மாதம் அமானுல்லாவின் பைக்கை நிறுவன ஊழியர்கள் பறிமுதல் செய்து சென்றதாக கூறப்படுகிறது..
கூடவே, கூடுதல் வட்டியுடன் சேர்ந்து பணத்தை செலுத்துமாறு அமானுல்லாவின் வீட்டிற்கு நிறுவனத்தார் அடியாட்களை அனுப்பியதாகவும், அக்கும்பல் வீட்டில் இருந்து பொருள்களை எடுத்து செல்ல முயன்று மிரட்டல் விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது..
இதனால் மனமுடைந்திருந்த அமானுல்லா விஷம் குடித்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது..