மதுரையில் 44 கோடி ரூபாய்க்கு போடப்பட்ட புதிய நெடுஞ்சாலை, திறப்பு விழாவிற்கு முன்பே விரிசல் ஏற்பட்டுள்ளதாக, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட தென்கால் கண்மாய் கரையானது, மாநகராட்சிக்கு உட்பட்ட பாலாஜி நகர் பகுதியில் இருந்து திருப்பரங்குன்றம் மூலக்கரை மற்றும் விளாச்சேரி வரை உள்ளது. இந்த கண்மாய் கரைக்கு மேல், சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநில நெடுஞ்சாலைத்துறை பணிகளை தொடங்கியது.
இந்த சாலை பணிகள் தொடங்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகிய நிலையில், தற்போது முழுவதுமாக முடிக்கப்பட்டு உள்ளது. அந்த சாலைகள் போடப்பட்டு 2 மாதங்களே ஆன நிலையில், மக்கள் பயன்பாட்டுக்கு வராத சாலையில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. விரிசல் ஏற்பட்ட இடங்களில், மாவீரன் படப்பாணியில் ஆங்காங்கே பேட்ஜ் ஒர்க் செய்யப்பட்டுள்ளது. சுமார் 600 மீட்டர் தொலைவுக்கு ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.