டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக போராடும் விவசாயிகளுடன் தமிழக அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் இட்டுள்ள பதிவில், மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதில், ஆரம்பம் முதலே திமுக அரசு நாடகமாடிக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார். சுரங்கம் அமைக்கும் பணிகளை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்து, தமிழக அரசு மேற்கொண்டு டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்தங்களைப் பரிசீலிக்கக் கூடாது என்று தெரிவித்த பின்னர், திமுக அரசு அது குறித்து அரிட்டாப்பட்டி விவசாயிகளுக்கு எந்த உறுதியும் அளிக்கவில்லை என்று கூறியுள்ளார். தற்போது அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை தடுத்து நிறுத்த முற்படுவது, டங்ஸ்டன் சுரங்கத்தைக் கைவிடும் எண்ணம் திமுகவுக்கு இல்லை என்பதை காட்டுவதாக கூறியுள்ளார். தமிழக அரசு உடனடியாக விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றும், விவசாயிகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.