கொடூர மரணம்.. SP-யவே நேரில் வர வைக்கும் அளவுக்கு `மர்மம்’ - கண்டுபிடித்து சொன்ன திடுக்கிடும் காரணம்

Update: 2024-12-17 06:29 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சாம்பள்ளியில் வெல்டிங் பட்டறையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டு உரிமையாளர் உயிரிழந்த நிலையில், மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...

போச்சம்பள்ளியை அடுத்த சுண்டகாப்பட்டியை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர், 12 ஆண்டுகளாக வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். நேற்று இரவு 7 மணி அளவில் ஜெயசங்கரும், மேலும் 3 பேரும் வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்று பார்த்தபோது, 4 பேரும் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த‌தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே 4 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், பட்டறை உரிமையாளர் ஜெய்சங்கர், வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மற்ற 3 பேரையும் மேல் சிகிச்சைக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அங்கு கூடிய உறவினர்கள் கதறி அழுதனர்.

வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, வட்டாட்சியர், தீயணைப்புத்துறையினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

டிராக்டரில் இருந்த பெட்டிக்குள் ஜெலட்டின் குச்சிகள் இருந்த‌து தான் வெடித்துள்ளதாக தெரிவித்த காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

டிராக்டர் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும், ஜெலட்டின் குச்சிகள் விற்பனை செய்த விற்பனையாளர் குறித்தும் விசாரித்து வருவதாகவும் கூறினார்.

கள்ளத்தனமாக ஜெலட்டின் குச்சிகள் விற்கப்பட்டிருந்தாலோ வாங்கப்பட்டிருந்தாலோ உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்