திருச்சி பைபாஸ் ரோட்டிலேயே பிணம் எரிப்பு.. திகிலுடன் கடந்த வாகன ஓட்டிகள்
மழை வெள்ளத்தில், மயானம் மூழ்கியதால் பைபாஸ் சாலையோரம் மூதாட்டியின் உடல் எரியூட்டப்பட்ட அவலமும், அதைப் பார்த்து மூதாட்டியின் கணவர் கண்கலங்கிய நிகழ்வும் மனதை ரணமாக்கி உள்ளது.. இது குறித்து விரிவாக பார்க்கலாம்....
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி ஊராட்சியில் தான், இந்த அவலம் அரங்கேறி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் பெய்த மழையின் காரணமாக, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் குளம், ஏரிகள் உள்ளிட்டவை வெள்ளத்தால் நிரம்பியுள்ளன. இது போதாது என, வீராணம் ஏரியிலிருந்தும் உபரி நீர் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, குமராட்சி உட்பட 20 மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்திருக்கின்றன.
விளைநிலங்களோடு, சேர்ந்து கிராமங்களில் இருந்த இடுகாடுகளும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இந்த சூழலில் தான், குமராட்சி ஊராட்சியைச் சேர்ந்த கலியமூர்த்தி என்பவரது மனைவி ராஜகுமாரி என்ற மூதாட்டி உடல்நலக்குறைவால் உயிரிழந்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து, சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் இரு பக்கமும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெள்ளநீர் சூழ்ந்த நிலையில், மூதாட்டியின் உடலை எரிக்க வழியில்லாமல் தவித்த உறவினர்கள், பைபாஸ் சாலை ஓரத்திலேயே உடலை எரியூட்டிய வேதனையான நிகழ்வு நடந்திருக்கிறது.
எரிந்த சடலத்தின் அருகே அவரது கணவர் கலியமூர்த்தி நிற்கதியாக, கவலையுடன் நின்று இருந்ததை சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியுடனும், வேதனையுடனும் பார்த்து கடந்து சென்ற சம்பவம் மனதை ரணமாக்கி உள்ளது.
ஒவ்வொரு மழைக் காலத்திலும், இறந்தவரின் சடலத்தை எரிக்கப் போகும் போதெல்லாம் இடுகாடு வெள்ளத்தில் மூழ்கி விடுவதாக வேதனை தெரிவித்திருக்கிறார், குமராட்சி பகுதியைச் சேர்ந்த விவசாயி இளஞ்செழியன்..
அதே சமயத்தில் குமராட்சியில் மேலும் ஒருவர் இறந்ததால், அந்த உடலையும் சாலையோரத்தில் வைத்து எரிக்க முடியாத சூழ்நிலைக்கு கிராமத்தினர் தள்ளப்பட்டனர். இதன் காரணமாக ஊரில் உள்ளவரின் தோட்டத்தில் வைத்து உடலை எரித்த வேதனை சம்பவம் அரங்கேறியது.
ஆகவே, சடலைத்தை எரிப்பதற்காக சாலை ஓரத்தில் நல்லதொரு மாற்று இடத்தை அமைத்து தரவேண்டும் அல்லது மின் மயானம் அமைத்து தரவேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஒருவரின் சடலத்தை அடக்கம் செய்வதில் கூட, இப்படி மனதை நொறுங்க வைக்கும் அளவிற்கு துன்பதை அனுபவிக்கும் இந்த பகுதி மக்களுக்கு அரசு விரைந்து ஒரு தீர்வை ஏற்படுத்தி தரவேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பும் கூட...!