பகலில் ஒரு முகம்..இரவில் வேறு முகம்..வாயை கொடுத்தே வாங்கி கட்டிக்கொண்ட ஓட்டுநர்..அதிர்ச்சி சம்பவம்
சூலூரை அடுத்த நீலாம்பூரில், நெடுஞ்சாலை அருகில் உள்ள சர்வீஸ் சாலையில் தனியாக செல்பவர்களிடம் நகை, பணம் பறிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் நீலாம்பூர் தீம் பார்க் அருகில் சூலூர் எஸ்.ஐ. ராஜேந்திர பிரசாத் தலைமையிலான போலீசார் இரவு நேரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, சந்தேகத்துக்கிடமாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி விசாரணை செய்தனர். ஆட்டோவில் இருந்த மூன்று பேரும் முன்னுக்குப் பின் முரணாக பேசியதை தொடர்ந்து அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் பகல் நேரத்தில் ஆட்டோ ஓட்டுவதும், இரவில் இருட்டில் நடந்து வருவோரிடம் நகை பறித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, பீளமேடு புதூரைச் சேர்ந்த கார்த்தி, திருப்பூர் ஊராட்சி மங்கலங்கத்தைச் சேர்ந்த கணேசன், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ரகுநாத் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.