2018இல், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவாக விமர்சிக்கப்பட்டதை நடிகர் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இது தொடர்பான புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவினர், எஸ்.வி.சேகர் மீது, இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை எம்.பி. எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி சேகர் தாக்கல் செய்த மேல் முறையீடு வழக்கு, நீதிபதி வேல் முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. சமூக வலை தளத்தில் பதிவிடப்பட்ட அந்த பதிவு உடனடியாக நீக்கப்பட்டதாகவும், தவறுதலாக நடைபெற்ற அந்த பதிவிற்காக மன்னிப்பு கோரியதாகவும், காவல் துறை தரப்பு ஆதாரங்களுக்கு சட்டப்படி, சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட வில்லை என்பதால் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என எஸ்.வி.சேகர் தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.