சென்னை மக்களின் பெரும் தலைவலிக்கு ஃபுல் ஸ்டாப்? - அருண் IPS-ன் அடுத்த மாஸ்டர் ஸ்கெட்ச்

Update: 2024-11-04 05:50 GMT

சென்னை மக்களின் பெரும் தலைவலிக்கு ஃபுல் ஸ்டாப்? - அருண் IPS-ன் அடுத்த மாஸ்டர் ஸ்கெட்ச்... கேட்டாலே குலை நடுக்கம்

பஸ்களில் "ரூட்டு தல" என்ற பெயரில் இளைஞர்கள் செய்து வரும் அட்ராசிட்டிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையை காவல்துறையினர் கையில் எடுத்துள்ளனர்.

பாட்டுப் பாடியபடி, படியில் தொங்கிக் கொண்டும், மாணவிகள், பெண்களைக் கேலிகிண்டல் செய்து கொண்டும் தங்களை ஏதோ, ஒரு சினிமா ஹீரோவைப் போல, எண்ணிக்கொண்டு வரும் சில கல்லூரி மாணவர்கள் மத்தியில் "ரூட்டு தல" என்ற பெயரில் ஒரு நப்பாசை நிலவி வருகிறது..

இதற்காக, மின்சார ரயில்கள் மற்றும் பஸ்களில் தங்களுடன் சக மாணவர்களை சேர்த்துக் கொண்டு "புட் போர்டு" அடித்தும், கானா பாடல்களை கோரசாகப் பாடியும் இவர்கள் செய்யும் சச்சரவுகள் கொஞ்ச நஞ்சமல்ல..

அவ்வப்போது, இந்த மாணவர்கள் கூட்டம் கூட்டமாக பிரிந்துகொண்டு தங்களுக்குள் மோதிக்கொள்வதும், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் கொடூரமாக தாக்கிக் கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன..

அந்தவகையில், சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் மாநில கல்லூரி மாணவர் ஒருவரை, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவத்தில், அந்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் மனதை ரணமாக்கி இருந்தது..

இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது கல்லூரி நிர்வாகமும், காவல்துறையும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது..

இப்படி கல்லூரி காலத்திலேயே, தங்களை ரவுடிகளாக பாவித்துக் கொண்டு செய்துவரும் அட்ராசிட்டிகளையும், அவ்வப்போது ஏற்படும் இந்த மாதிரியான உயிரிழப்புகளையும் தடுப்பதற்காகவே, காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது..

இப்படியாக, பஸ்களிலும் ரயில்களிலும் தலைவிரித்து ஆடும், "ரூட்டு தல" பிரச்சனையால் ஏற்படும் மோதல்களை தடுக்க சம்பந்தப்பட்ட மாணவர்களின் வீடுதேடிச் சென்றும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.. அதோடு, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் அரங்கேற்றி வருகின்றனர்..

இருப்பினும், ரவுடிகளைப் போல, மோதிக்கொள்ளும் மாணவர்களுக்கு 10 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் ஆயுள் தண்டனை வரை பெற்றுத் தரும் புதிய சட்டத்தை கையில் எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்..

முதற்கட்டமாக, சென்னை முழுவதும் 12 காவல் மாவட்டங்களில் உள்ள துணை ஆணையர்களுக்கு, சென்னை காவல்துறை ஆணையர் தரப்பில் இதற்கான உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

பிரச்சனைக்குரிய பஸ்கள் மற்றும் ரயில்களில், ரூட்டு தல எனத் தங்களைப் பாவித்துக் கொண்டு சுற்றுபவர்களை அடையாளம் கண்டு, அவர்களிடம் உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்குமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது..

அதன்படி, சென்னையில் இதுவரை 400-க்கும் மேற்பட்ட முன்னாள், இந்நாள் ரூட்டு தலைகள் கண்டறியப்பட்டு, அவர்களில் 150 பேரிடம் உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

"ரூட்டு தல" விவகாரம் மீண்டும் தலை தூக்கினால், 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை பெற்றுத் தர காவல்துறை தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..

Tags:    

மேலும் செய்திகள்