காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரேம்குமார் கூட்டுறவு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார். கடந்தாண்டு இவரது நண்பர் மூலம் லயோலா ரோஜாரியா சர்ச்சில் என்பவர் அறிமுகம் ஆனார். அமைச்சர் மா.சுப்ரமணியன் தமது தந்தைக்கு நெருக்கமானவர் என்றும் பிரேம்குமாருக்கு VAO வேலையும், அவரது சகோதரிக்கு மருத்துவமனை மேற்பார்வையாளர் வேலையும் வாங்கித் தருவதாகக் கூறி பல லட்ச ரூபாய் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. புழல் அடுத்த புத்தகரத்தைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவரது வீட்டில் வைத்து கடந்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் பல தவணைகளாக பிரேம் குமாரிடம் இருந்து லயோலா ரோஜாரியா சர்ச்சில் உள்ளிட்ட 3 பேர் 7 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கியுள்ளனர். பல மாதங்களாகியும் வேலை வாங்கித் தராமல் இருந்த நிலையில், பிரேம் குமாருக்கு போலி பணி ஆணையை கொடுத்துள்ளனர்... அது போலி என்பதை அறிந்து பிரேம் குமார் பணத்தைத் திருப்பிக் கேட்ட நிலையில், அவர்கள் தர மறுத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பிரேம்குமார் சென்னை ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில் புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து லயோலா ரோஜாரியா சர்ச்சில், அவரது சகோதரி மகேஸ்வரி ஆகிய இருவரை கைது செய்து தலைமறைவான அவரது தந்தை அந்தோணி ராஜைத் தேடி வருகின்றனர்...