திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே, அரசு பள்ளி நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சரித்திர பதிவேடு குற்றவாளி பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கண்ட்ராம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழாவில், துத்திப்பட்டு ஊராட்சி தலைவர் சுவிதா கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்த விழாவில் அவரது கணவர் கணேசும் கலந்து கொண்டார். பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் சரித்திர பதிவேடு குற்றவாளியான கணேஷ் எப்படி அரசுப் பள்ளி விழாவில், மேடை ஏற அனுமதிக்கப்பட்டார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.