பேச்சாளர்களையும் எழுத்தாளர்களையும் உருவாக்க வேண்டும் என்று, திமுக மகளிர் அணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டின் நிறைவு விழாவை முன்னிட்டு, திமுக மகளிர் அணி சார்பில் வினாடிக்கு வினா போட்டியின் இறுதிப் போட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பரிசுகளை வழங்கி சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், எங்கே திராவிடர் பட்டாளம் என்று கேள்வி கேட்பவர்களுக்கு அடையாளம் காட்டும் நிகழ்வாக கனிமொழி இந்த நிகழ்வை நிகழ்த்தி காட்டியதாக பாராட்டினார். பாசத்தில் கனிமொழியாகவும், தமிழக உரிமைக்காக நாடாளுமன்றத்தில் பேசும் போது கர்ஜனை மொழியாகவும் தங்கை கனிமொழி இருக்கிறார் என்றும் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.