ஒரே நாடு ஒரே தேர்தல்.. ``நேற்றே முடிவு தெரிந்துவிட்டது'' - பாஜகவுக்கு காத்திருந்த அதிர்ச்சி
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்துள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா என்ன சொல்கிறது? சட்டம் அமலானால் என்ன நடக்கும்...? என்பது குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு
நாடாளுமன்றத்திற்கும், அனைத்து சட்டப்பேரவைகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற முதல் அடியை எடுத்து வைத்துள்ளது பாஜக.
இதற்காக அரசியலமைப்பில் 129 ஆவது சட்ட திருத்தம் மசோதா 2024, யூனியன் பிரதேசங்களான டெல்லி, புதுச்சேரி, காஷ்மீர் சட்டப்பேரவைகளுக்கு ஒன்றாக தேர்தல் நடத்தும் வகையில் யூனியன் பிரதேச சட்டங்கள் திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.
இதில் அரசியலமைப்பில் 129 ஆவது சட்ட திருத்த மசோதா இந்திய அரசியலமைப்பில் 83, 172 மற்றும் 327 ஆகிய 3 பிரிவுகளை திருத்தம் செய்யவும்,
புதிய சட்டப்பிரிவு 82A-யை இணைக்கவும் முன்மொழிகிறது.
முதலாவதாக அரசியலமைப்பில் புதிதாக சேர்க்க கேட்கப்படும் 82A சட்டப்பிரிவு, நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டப்பேரவைக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வழிவகை செய்கிறது.
நாடாளுமன்றத்திற்கு தேர்தல் முடிந்ததும், முதல் நாடாளுமன்றக் கூட்டத்தில் குடியரசு தலைவர் இந்த சட்ட திருத்தம் அமலுக்கு வருகிறது என அறிவிக்க வேண்டும்.
அப்படி குடியரசு தலைவர் எப்போது சட்டம் அமலுக்கு வருகிறது என சொல்கிறாரோ, அதற்கு பிறகு நடக்கும் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றி பெறும் அரசுகளின் பதவிக் காலம், நாடாளுமன்ற பதவி காலத்தோடு காலாவதியாகும்.
சில மாநிலங்களில் சட்டப்பேரவையின் பதவிக்காலம் 5 ஆண்டு என்பதிலிருந்து குறைக்கப்படும் என்பதாகும்.
உதாரணமாக, 2029 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் குடியரசு தலைவர் சட்டம் அமலாகிறது என அறிவித்தால்,
தமிழகத்தில் 2031-ல் சட்டப்பேரவை தேர்தலில் வென்று ஆட்சியமைக்கும் அரசின் பதவிக்காலம் 2034 -ல் நாடாளுமன்ற பதவிக்காலம் முடியும் போது முடிந்துவிடும்.
நாடாளுமன்ற பதவிகாலத்தை வரையறை செய்யும் சட்டப்பிரிவு 83-ல் 5 உட்பிரிவுகள் இணைக்கப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து முதல் கூட்டத் தொடரில் இருந்து 5 வருடம் புதிய அரசு ஆட்சியிலிருக்கும்.
ஆனால் 5 வருடங்களுக்கு முன்பாகவே அரசு கவிழ்ந்தாலோ, கலைக்கப்பட்டாலோ மீதமிருக்கும் காலம் காலாவதியாகாத காலம்.
அதற்காக நாடாளுமன்றத்திற்கு இடைக்கால தேர்தல் நடத்தப்படும். காலாவதியாகாத காலம் மட்டுமே அந்த அரசு ஆட்சியிலிருக்கும். உதாரணமாக 2029 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றும் ஆட்சியமைக்கும் அரசு 2031-ல் கவிழ்ந்தால், அப்போது நாடாளுமன்றத்திற்கு இடைத்தேர்தல் நடத்தப்படும்.
இடைத்தேர்தலில் ஆட்சிக்குவரும் அரசின் பதவிக்காலம் 5 வருடம் கிடையாது, 2034-ல் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே முடிவுக்கு வரும்.
இதேபோல் மாநில சட்டப்பேரவை பதிவிக்காலத்தை வரையறை செய்யும் சட்டப்பிரிவு 172-ல் 4 உட்பிரிவுகள் சேர்க்கப்படுகிறது.