நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள்

Update: 2022-10-01 02:04 GMT

நடிப்பிற்கு இலக்கணம் வகுத்த, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த தினம் இன்று.


1928ல் விழுப்புரத்தில் பிறந்த வி.சி.கணேசன், பின்னர் குடும்பத்துடன் திருச்சிக்கு குடி பெயர்ந்தார். ஏழு வயதில் பெற்றோருக்கு தெரியாமல் திருச்சியில் முகாமிட்டிருந்த மதுரை ஸ்ரீபாலகான சபா என்ற நாடகக்குழுவில் சேர்ந்தார். சிறுவனாக நாடகங்களில் நடித்த போதே, மாறுபட்ட வேடங் களில் நடிக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தார்.

1946ல் திராவிட கழக மாநாட்டில் பேரறிஞர் அண்ணா எழுதிய சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.

1952ல் பராசக்தி என்ற சமூக சீர்திருத்தம் பேசும் புரட்சிகர படத்தில் கதாநாயகனாக அறிமுகமான சிவாஜி கணேசன், கருணாநிதியின் வசனங்களை அனல் பறக்க பேசி பெரும் புகழ் பெற்றார்.


இவர் நடித்த சரித்திர வீரா்களின் கதாபத்திரங்களான மனோகரா, ராஜ ராஜ சோழன், வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன் போன்ற திரைப்படங்கள் இவர் பேசும் வசனத்திற் காக பெயர் பெற்றவை.

திருவிளையாடல் திரைப்படத்தில் சிவபெருமானாக நடித்து பெரும் புகழ் பெற்றார்.

ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய கதாபாத்திரம் வித்யாசமாக இருக்க வேண்டும் என்பதில் சிவாஜி கணேசன் தனி கவனம் செலுத்தினார். அதற்கேற்றவாறு உடல்மொழி, ஒப்பனை, நடை, நடிப்பு போன்றவற்றை மாற்றியமைத்து கொள்வது இவரின் தனிச்சிறப்பாகும்.

பத்ம பூஷண், செவாலியே விருது, தாதா சாகேப் பால்கே விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றார்.

ஆரம்ப நாட்களில் திராவிட இயக்கத்தில் இருந்த சிவாஜி கணேசன், 1961ல் காங்கிரஸில் இணைந்தார். 1982ல் நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினரானார். 1987ல் காங்கிரஸில் இருந்து விலகி 'தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். 2001ல் தனது 73 வது வயதில் காலமானார்.

தமிழ் திரைபட வரலாற்றில் முத்திரை பதித்த சிவாஜி கணேசன் பிறந்த தினம், 1928 அக்டோபர் ஒன்று.

Tags:    

மேலும் செய்திகள்