- பாஜகவும், காங்கிரசும் வரிந்துக்கட்டி நிற்க கர்நாடக தேர்தல் களத்தில் அனல் தெறிக்கிறது... இங்கு வெற்றிப்பெற போவது யார்...? என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் நிலவுகிறது. தீர்ப்பளிக்கவுள்ள மக்களை, மற்ற மாநிலங்களை போல் கிராமப்புற வாக்கு, நகர்புற வாக்கு என இரு பிரிவுகளில் அடக்கிவிட முடியாது.
- ஆம், அரசியல் ரீதியாக மும்பை கர்நாடகா, ஐதராபாத் கர்நாடகா, மத்திய கர்நாடகா, கடற்கரை கர்நாடகா, தெற்கு கர்நாடகா, பெங்களூரு கர்நாடகா என்ற 6 பிரிவுகளை கொண்டிருக்கிறது.
- தமிழகம், கேரளா, மராட்டியம், ஆந்திராவின் பல்வேறு பகுதிகளை மைசூரு மாகாணத்துடன் இணைத்து உருவாக்கப்பட்டதே கர்நாடகம். இப்போதும் கதம்பமாக தேர்தல்களில் தமிழ், மலையாளம், தெலுங்கு, மராத்தி பேசும் மக்களின் தாக்கம் எதிரொலிக்கும்...
- மும்பை கர்நாடகா மராட்டியம் எல்லையையொட்டிய பெல்காம், பாகல்கோட், பீஜாப்பூர், தார்வாட், ஹாவேரி மாவட்டங்களை உள்ளடக்கியது. மராட்டிய அரசியல் தாக்கம் இருக்கும் பகுதியில் எடியூரப்பாவின் லிங்காயத்துகள் செல்வாக்கை கொண்டிருக்கிறார்கள். இங்குள்ள 50 தொகுதிகளில் கடந்த முறை பாஜக 30 இடங்களையும், காங்கிரஸ் 17 இடங்களையும் வென்றிருந்தது.
- கிழக்கே ஆந்திர - தெலங்கானா எல்லையை ஒட்டிய ஐதராபாத் கர்நாடகாவில் தெலுங்கு அரசியலின் தாக்கமும் இருக்கும். பிதார், குல்பர்கா, ராய்ச்சூர், யாதகிரி, கொப்பள் ஆகிய மாவட்டங்களை உள்ளடங்கிய பகுதியில் மொத்தம் 31 தொகுதிகள் உள்ளன. கணிசமாக லிங்காயத்துக்கள், பட்டியல் மற்றும் பழங்குடியின மக்கள் செல்வாக்கு கொண்ட பகுதியாகும். கடந்த தேர்தலில் காங்கிரஸ் 15 இடங்களிலும் பாஜக 12 இடங்களிலும் வென்றிருந்தது.
- வலுவான லிங்காயத் செல்வாக்குடன், பட்டியலின மற்றும் பழங்குடியினர் வாக்கை கொண்டது மத்திய கர்நாடகா...
- ஆந்திரா எல்லையையொட்டிய பெல்லாரி, சித்ரதுர்கா, தேவாங்கிரி, சிவமோகா, சிக்மங்களூர் பகுதிகளை உள்ளடக்கியது. கடந்த தேர்தலில் பாஜக வெற்றிக்கொடியை நாட்டியது. 36 தொகுதிகளில் 24 இடங்களை பாஜக வென்ற நிலையில், காங்கிரஸ் 12 இடங்களை வென்றிருந்தது.
- கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் ஆழமாக வேரூன்றியிருக்கும் பகுதி கடலோர கர்நாடகா... உத்தர கன்னடம், உடுப்பி, தட்சிண கன்னடா, குடகு பகுதியை உள்ளடக்கிய இப்பகுதி பாஜகவின் கோட்டை... கடந்த தேர்தலில் இங்குள்ள 21 தொகுதிகளில் 18 தொகுதிகளை வசமாக்கியிருந்தது பாஜக... காங்கிரஸ் 3 இடங்களில் மட்டும் வென்றிருந்தது.
- தெற்கு கர்நாடகம் கர்நாடக அரசியலில் செல்வாக்குமிக்க ஒக்கலிக்கர்கள் அதிகம் வாழும் பகுதியாகும். தும்கூர், கோலார், மாண்டியா, ஹாசன், மைசூர், சாம்ராஜ் நகர், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களை அடங்கிய 50 தொகுதிகளில் கடந்த முறை ஒக்கலிக்கர்கள் சமூகத்தை சேர்ந்த தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் 24 இடங்களில் வென்றிருந்தது. காங்கிரஸ் 15 இடங்களிலும் பாஜக 9 இடங்களிலும் வென்றிருந்தது.
- கர்நாடகாவை போன்று, பெங்களூருவும் பலதரப்பட்ட மக்கள் வாழும் பகுதியாகும். தமிழர்கள் கணிசமாக செல்வாக்கு கொண்டிருக்கும் பகுதி. மலையாளம், தெலுங்கு, மராத்தி, இந்தி மொழி பேசுபவர்களை கொண்டது ஐ.டி.நகரம்.
- நகர்ப்புற மக்களின் மனப்பான்மையை பிரதிபலிக்கும் பகுதி, மாநிலத்தில் செல்வாக்கு கொண்டிருக்கும் சாதிய கணக்கு இங்கு எடுபடாது என்ற பார்வையும் இருக்கிறது. கடந்த முறை இங்குள்ள 36 தொகுதிகளில் காங்கிரஸ் 18 இடங்களையும், பாஜக 11 இடங்களையும், மதசார்பற்ற ஜனதா தளம் 7 இடங்களையும் வென்றிருந்தது.