புனர்பூசம் நட்சத்திரம் - பரிகார தலம் - அதிதீஸ்வரர் கோயிலின் சிறப்புகள்

Update: 2023-04-10 02:29 GMT

திருப்பத்தூர் மாவட்டம் பழைய வாணியம்பாடியில் அமைந்துள்ள இத்திருத்தலம் சுமார் ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது... பல்லவ மன்னனால் கட்டப்பட்டது...

தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் பெரியநாயகி அருள்பாலிக்கும் இத்தலத்தை வழிபட்டால் ஆயிரம் கிழக்கு பார்த்த கோயில்களை வழிபட்ட பலன் கிட்டும்...

காச்ய முனிவரின் மனைவி அதிதி, புனர்பூச நட்சத்திர நாட்களில் விரதம் இருந்து தான் தேவர்களைப் பெற்றெடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன...

இந்த புனர்பூச நட்சத்திரக்காரர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் கூடுதல் நன்மை விளையும்...

பிரம்மனும் சரசுவதியும் ஒருமுறை உரையாடிக் கொண்டிருந்தனர்... அப்போது, "உலக உயிர்களைப் படைக்கும் நான் தான் பெரியவன்... அதனால் தான் பிரம்மா, விஷ்ணு, சிவன் என தனது பெயரை முதலில் கொண்டு கூறுகின்றனர்..." என பிரம்மன் கூற, அதைக் கேட்ட கலைமகள் சரசுவதி சிரித்து விட்டாளாம்...

இதனால் கடும் கோபம் கொண்ட பிரம்மா, வாணி தேவியை ஊமையாகும்படி சபித்து விட்டார்...

வருந்திய வாணியோ பூலோகம் வந்து சிருங்கேரியில் தவம் புரிந்தாள்...

வாணியைப் பிரிந்த பிரம்மன் காஞ்சியில் வேள்விசெய்து பூர்ணாகுதி கொடுக்க முற்பட்டார்...

உடனிருந்த தேவர்களோ... "துணைவியார் இல்லாமல் வேள்வி எப்படி பூர்த்தியாகும்?" என வினவ, உடனே வாணியை சமரசம் பேசி அழைத்து வந்தார் பிரம்மன்...

பாலாற்றின் வடகரையில் அமைந்துள்ள சிவாலயத்தில் அறச்சாலை அமைத்துத் தானும் தவம் செய்யத் துவங்கினார்...

அகமகிழ்ந்த சிவனும் பார்வதியும் வாணிக்கு அருளி, "வாணி நீ பாடு" என கூற... ஊமைத்தன்மை நீங்கப்பெற்ற வாணி பாடினாள்...

வாணி பாடிய தலமாதலால் இது "வாணியம்பாடி" ஆயிற்று...

இத்தலத்தில் சரசுவதிக்கென தனி சன்னதி உள்ளது... அங்கு கலைமகள் கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் மடியில் வீணையுடன் அழகே உருவாய் வீற்றிருக்கிறாள்...

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் நிச்சயம் நிவாரணம் கிடைக்கும்...

அதிலும் நட்சத்திர தினங்களில் புது வீடு வாங்குவது அல்லது வீட்டிற்குப் பால் காய்ச்சுவது என விருத்தியாகும் செயல்களை செய்தால் இன்னும் சிறப்பு...

குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பும் சரி... மாணவர்கள் தேர்வெழுதும் முன்பும் சரி... இத்தலத்திற்கு வந்து வாணி தேவையை வழிபட்டுச் சென்றால் கல்வியறிவு மேம்பட்டு, மதிப்பெண்கள் குவியும்...

புதுத் தொழில் துவங்குபவர்கள் இத்தலம் வந்து வழிபட்டு செல்வது சிறப்பு...

அதிலும் குறிப்பாக உணவகம் வைத்திருப்பவர்கள் அடிக்கடி இங்கு ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால் தொழிலில் உள்ள குறைபாடுகள் நீங்கி நல்வழி பிறக்கும் என்பது நம்பிக்கை...

இங்கிருக்கும் தட்சிணாமூர்த்து மான், மழு ஏந்தி... யோக பட்டை, சின்முத்திரையுடன் நந்தி மீது அமர்ந்து தவம் செய்வது சிறப்பு...

கோயிலானது காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்...

வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது இந்த கோயில்...

பூச நட்சத்திரத்திற்கான பரிகார தலம் என்ன? பார்க்கலாம் நாளைய தினம் ஒரு தரிசனம் பகுதியில்...

Tags:    

மேலும் செய்திகள்