கவிழும் நிலையில் ராட்சத இயந்திரம் - 5 கிமீ-க்கு அணிவகுத்த வாகனங்கள் - பழகிப்போன போரூர் வாசிகள்
சென்னை போரூரில் மெட்டோ ரயில் பணிக்காக பள்ளம் தோண்டும் இயந்திரம் சாலையின் நடுவே சாயும் நிலையில் இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2ம் கட்ட மெட்ரோ ரயில் பணி வடபழனியில் இருந்து பூந்தமல்லி வரை தீவிரமாக நடந்து வருகிறது. போரூரில் தூண்கள் அமைக்க துளை போடும் பணிகள் நடக்கும் நிலையில், வளசரவாக்கம் செல்லும் சாலையில் பூமியில் துளை போடும் எந்திரம் திடீரென சாலையின் ஓரம் கால்வாயை உடைத்துக் கொண்டு உள்ளே இறங்கியுள்ளது. இதனால் அந்த ராட்சத எந்திரம் சாலையின் நடுவே கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு சாலையில் சென்று வருகின்றனர்.
இயந்திரத்தை சீர் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். போரூரில் இருந்து வளசரவாக்கம் செல்லக்கூடிய ஆற்காடு சாலையின் ஒரு புறம் இரும்பு தகடுகளால் மூடப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதால் அவ்வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலையில் அணிவகுத்து நிற்கின்றன.