விடிந்ததும் தலைகீழான ஹெட்லைன் - மதுரை பாலாவுக்கு போட்ட ஸ்கெட்ச்.. பசுபதி கேங்கை பதறவிட்ட சேசிங்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே, கார் சேசிங் சம்பவத்தில் 5 பேர் கைதான நிலையில், நியோ மேக்ஸ் நிறுவன நிர்வாகியை கடத்தி பணம் பறித்து விட்டு தப்பியோடியது அம்பலமாகியுள்ளது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்...
திண்டுக்கல் மாவட்டம் சாணர்பட்டி காவல் நிலைய பகுதியில், குடிபோதையில் பல்வேறு போலீஸ் செக் போஸ்ட்கள், வாகனங்களை மோதி விட்டு கார் ஒன்று நள்ளிரவில் வேகமாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சினிமாவை மிஞ்சும் அளவுக்கு ‘சேசிங்‘, சென்ற அந்த காரில் இருந்து இறங்கி தப்பித்த பசுபதி, முத்துக்குமார், கார்த்திக், வீரகணேசன், ஆனந்த் குமார் ஆகிய 5 பேர் பொதுமக்களிடம் பிடிபட்டனர்.
விசாரணையில், வாடிப்பட்டி அருகே நியோமேக்ஸ் நிர்வாகியை கடத்திச் சென்று, பணம் பறித்தது தெரிய வந்தது. இதையடுத்து, 5 பேரையும் வாடிப்பட்டிக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரித்த போது பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
நியோமேக்ஸ் நிறுவன விற்பனை மேலாளர் தேவா என்பவரிடம், கார் ஓட்டுநராக இருந்த பசுபதி என்பவர் அதிக வட்டி கிடைக்கும் என நம்பி 9 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார்.
ஆனால், நியோமேக்ஸ் நிறுவனம் முடங்கியதால், பணத்தை பசுபதி கேட்டபோது, தானும் முதலீடு செய்து ஏமாந்துள்ளதாக கை விரித்துள்ளார், தேவா.
இதையடுத்து, மதுரையில் உள்ள நியோமேக்ஸ் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியான பாலாவை கடத்தி பணத்தை பெற பசுபதியும் அவரது நண்பர்களும் தேடியுள்ளனர். அவர் கிடைக்காததால், மற்றொரு நிர்வாகியான கார்த்திகேயன் என்பவரை கடத்தினால் பணம் கிடைக்கும் என்று தேவா யோசனை கூறியுள்ளார்.
அதன்படி, நாமக்கல்லுக்கு காரில் சென்ற கார்த்திகேயனை பின் தொடர்ந்து சென்று, வாடிப்பட்டி அருகே அவரை வழி மறித்து கடத்திய பசுபதி கும்பல், அவரிடம் பேரம் பேசி ஒரு தொகையை பெற்றதாக தெரிகிறது.
திட்டம் நிறைவேறியதை தொடர்ந்து, கார்த்திகேயனை திண்டுக்கல்லில் இறக்கி விட்டு, பசுபதி கும்பலுக்கு 3 லட்சம் ரூபாய் கொடுத்து ஊருக்கு செல்லுமாறு தேவா கூறியுள்ளார்.
அந்த பணத்தை வாங்கிக் கொண்ட பசுபதி கும்பல், மது அருந்திவிட்டு, தேவகோட்டை நோக்கி காரில் சென்றபோதுதான் அந்த திருப்பம் அரங்கேறி இருக்கிறது. சாணர்பட்டி பகுதியில் வழக்கமான சோதனையில் இருந்த போலீசாரைப் பார்த்து, தங்களைப் பிடிக்கத்தான் போலீசார் நிற்பதாக நினைத்துக் கொண்டு, தடுப்புகளை இடித்து தள்ளிவிட்டு சென்றுள்ளனர். அதன்பிறகே அடுத்துடுத்து மிகப்பெரிய சேசிங் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
மலைப்பகுதியில் தப்பிக்க முயன்போது ஆனந்த குமார், வீர கணேஷ் ஆகியோருக்கு கையில் முறிவு ஏற்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்திய கார், 3 லட்சம் ரூபாய் பணம், ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த கடத்தலில் முக்கிய நபரான நியோமேக்ஸ் மேலாளர் தேவாவை போலீசார் தேடி வருகின்றனர். அவர் சிக்கினால்தான், கார்த்திகேயனிடம் இருந்து எவ்வளவு பணம் பெறப்பட்டது என்பது தெரிய வரும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.