வீட்டில் புதையல் எடுத்து தருவதாக கூறி மோசடி- பெண்ணிடம் ரூ.96 ஆயிரம் பறித்த மந்திரவாதி
சேலம் அருகே வீட்டில் இருந்து புதையல் எடுத்து தருவதாக கூறி பண மோசடி செய்த மந்திரவாதியை போலீசார் கைது செய்ததன் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த கீரப்பட்டி மலை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். கூலித் தொழிலாளியாக உள்ளார். இவரின் மனைவி பழனியம்மாள்... விவசாய தொழில் செய்து வருகிறார்.
கடந்த டிசம்பர் மாதம் வீட்டில் பழனியம்மாள் மட்டும் இருந்த போது அந்த வழியாக வந்த ஒருவர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார். அப்படியே நைசாக பேச்சுக் கொடுத்த அந்த நபர் தனக்கு குறி சொல்ல தெரியும் என்றும் மந்திரவாதி என்றும் அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார்.
உங்கள் வீட்டில் தங்கம், வெள்ளி, செம்பு கலந்த புதையல் உள்ளது என்றும், அதை எடுக்காவிட்டால் உங்கள் மகளின் உயிருக்கு ஆபத்து என்றும் கூறவே அதிர்ந்து போயிருக்கிறார் பழனியம்மாள்.
ஆனால் பரிகாரம் செய்தால் எல்லாம் சரியாகி விடும் என கூறிய மந்திரவாதி, வீட்டு பூஜையறையில் கலசம் ஒன்றை வைத்து திருமணமாகாக பெண் 21 நாட்கள் பூஜை செய்ய வேண்டும் என்றும், பூஜைகள் முடிந்த பிறகே பொருளை எடுக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.
இந்த புதையலை எடுத்துக் கொடுக்க ஒரு லட்ச ரூபாய் பணமும் பேசியிருக்கிறார் அந்த மந்திரவாதி. ஆனால் இதை எல்லாம் உண்மை என்றே நம்பிய பழனியம்மாள்,
கலசம் செய்வதற்கு 25 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். பின்னர் கலசத்தை கொடுத்த அந்த மந்திரவாதி, பூஜை அது இது என கூறி சுமார் 96 ஆயிரம் ரூபாய் பணம் வரை கறந்து விட்டு திடீரென அமைதியானார்..
புதையல் எப்போது எடுக்கிறோம் என பழனியம்மாள் கேட்டதற்கு தன்னை ஒரு சக்தி தடுக்கிறது என்றும், அதை நீக்க கூடுதலாக பணம் வேண்டும் என்றும் கேட்கவே சந்தேகமடைந்த பழனியம்மாள் உடனே இதுகுறித்து வாழப்பாடி போலீசில் புகார் அளித்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வாழப்பாடி போலீசார், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு இறையமங்கலத்தை சேர்ந்த மந்திரவாதி செல்வராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மோசடிகளில் தினுசு தினுசாக பல சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் இன்னும் புதையல் எடுத்து தருகிறேன் என கூறி வந்தவரிடம் பணத்தை இழந்து விட்டு கண்ணீர் வடிக்கிறார் பழனியம்மாள்..