தமிழகத்தில் 46 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ஒரு கோடியே 12 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் வட்டார போக்குவரத்து, வணிக வரி, ஊரமைப்பு, நகராட்சி உள்ளிட்ட அலுவலகங்களில், அதிகாரிகள் பரிசு பொருட்கள் மற்றும் பணம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கோபிசெட்டிபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தினர். இதில் ஒரு லட்சத்து, 28 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகையில், மாவட்ட ஊராட்சிதுறை அலுவலகத்தில் நடைபெற்ற அதிரடி சோதனையில், ஒரு லட்சம் ரூபாய் கணக்கில் வராத லஞ்சப் பணம் சிக்கியது. திருப்பத்தூர் மதுவிலக்கு அமல் பிரிவு அலுவலகத்தில் கணக்கில் வராத ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல், கள்ளக்குறிச்சி, செங்கம், செங்கல்பட்டு, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கரூர்,தர்மபுரி, உளுந்தூர்பேட்டை, ராமநாதபுரம்,விருதுநகர், நெல்லை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஒரு கோடியே 12 லட்சத்து 58 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.