38 நிமிடத்தில் 69 செய்திகள்...காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (13.06.2023)

Update: 2023-06-13 04:39 GMT

புதிதாகப் பணிகளில் சேர்க்கப்பட்ட 70 ஆயிரம் பேருக்கு காணொலி மூலம் பிரதமர் மோடி இன்று பணியாணை வழங்க உள்ளார். நாடு முழுவதும் 43 இடங்களில் இந்த வேலைவாய்ப்பு மேளா நடைபெற உள்ளது. மத்திய அரசின் துறைகள், மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளின் துறைகளில் பணி நியமனங்கள் செய்யப்பட உள்ளன. வேலை உருவாக்கம் என்னும் பிரதமரின் உயர் முன்னுரிமைத் திட்டத்தை நிறைவேற்றுவதன் ஒரு படியாக இந்த வேலைவாய்ப்பு மேளா நடத்தப்படுகிறது.

ஒடிசா ரயில் விபத்தில் பஹனகா பஜார் ரயில் நிலையத்தின் உதவி ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட ஐந்து பேரை விசாரணைக்காக அழைத்துச் சென்ற சிபிஐ, 3 பேரை கைது செய்துள்ளனர். விபத்து நடந்த பஹனகா பஜார் ரயில் நிலையத்திற்கு அருகே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்ததாகவும் இதன் காரணமாக இன்டர் லாக்கிங் அமைப்பு மூடப்பட்டதாக சிபிஐ முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ரயில்வே ஊழியர்கள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகள் உட்பட 50 க்கும் மேற்பட்டோரிடம் சிபிஐ வாக்குமூலத்தை பதிவு செய்து வருகிறது.

மாநில பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ஆலோசனை நடத்துகிறார். டெல்லி விஞ்ஞான் பவுனில் காலை 10.30அளவில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கலந்து கொள்ள உள்ளார். பேரிடர் மேலாண்மையில் உள்ள சவால்கள் குறித்தும், தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மேலும், பிபர்ஜாய் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயக்கம் சுயநலவாதிகள் கையில் இருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் அமமுக சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர், அதிமுகவை மீட்டெடுக்க ஓபிஎஸ், வைத்திலிங்கம் தங்களுடன் இணைந்துள்ளதாகவும், இந்த இணைப்பு தமிழகம் முழுவதும் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்