நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ம் தேதி தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையடுத்து, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திமுக எம்.பி.கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, மதிமுக எம்.பி. வைகோ உட்பட அனைத்து கட்சிகளின் சார்பில் எம்பிக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல், வஃபு வாரிய சட்ட திருத்தம் உள்பட 15 மசோதாக்களை தாக்கல் செய்ய மோடி தலைமையிலான மத்திய அரசு பட்டியலிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பிக்கள், அதானி விவகாரம், மணிப்பூர் விவகாரம், தமிழக மீனவர் பிரச்சினை உள்ளிட்டவை குறித்து இரு அவைகளிலும் பேசப்படும் என்றனர்.