மலேசியாவில் தமிழரை கடத்தி பிளாக்மெயில்.. கடன் வாங்கி பணம் அனுப்பிய தந்தை
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மன்னைநகர் பகுதியை சேர்ந்தவர்கள் அன்பழகன் - வசந்தா தம்பதியினர். இவர்களது மகன் விநாயகமூர்த்தியை, மலேசியாவிற்கு நிரந்தர விசாவில் அனுப்புவதாக கூறிய ஏஜெண்ட், தற்காலிக விசாவில் ஏமாற்றி 11 மாதங்களுக்கு முன்பு அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மலேசியாவில் விநாயகமூர்த்தி வேலை பார்த்த நிறுவனத்தின் உரிமையாளர், விநாயகமூர்த்தியின் தந்தையை தொடர்புகொண்டு 10 லட்சம் கொடுத்தால் அவரது மகனை உயிருடன் இந்தியாவிற்கு அனுப்பி வைப்பதாக கூறி மிரட்டியதாகவும், அதற்கு தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என அன்பழகன் கூறியதாகவும் தெரிகிறது. இதனிடையே தன்னால் இயன்ற 7 லட்ச ரூபாயை தயார் செய்த அன்பழகன், மலேசிய நபரை தொடர்புகொண்டு தகவலை தெரிவிக்க, அவர் அனுப்பிய நபர் 7 லட்சத்தை பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, விநாயகமூர்த்தியை கொலை செய்து மூட்டையாக கட்டி விட்டுச்சென்றதாக மலேசியாவில் உள்ள உறவினர் அன்பழகனிற்கு தகவல் தெரிவிக்க, அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து பட்டுக்கோட்டை போலீசாரிடம் புகாரளித்துள்ளார். அதில் தனது மகனின் உடலை மீட்டுத்தரவும், குற்றவாளிகளை கைது செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.