பிரான்ஸில் இருந்து திரும்பிய தமிழக அரசு ஆசிரியர்கள்.. அடுக்கடுக்காக பகிர்ந்த நெகிழ்ச்சி விஷயம்
பிரான்ஸ் நாட்டிற்கு கல்வி சுற்றுலா சென்றது, தமிழக மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு அரசின் 'கனவு ஆசிரியர்' என்ற திட்டத்தின் கீழ் பிரான்ஸ் நாட்டுக்கு கல்வி சுற்றுலாவுக்கு சென்றிருந்த 54 ஆசிரியர்கள் சென்னை திரும்பினர். அவர்களை, தமிழ்நாடு அரசு பள்ளிகளின் இயக்குனர் நரேன், பள்ளிக்கல்வித்துறை பணிகள் தொகுதி இணை இயக்குனர் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள், ஆசிரியர்களின் உறவினர்கள் என உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆசிரியர்கள், தமிழக அரசின் இந்த 'கனவு ஆசிரியர்' கல்வி சுற்றுலா திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று நன்றி தெரிவித்தனர். பிரான்ஸ் மக்கள் கலாச்சாரம், கல்வி முறை, நீர் மேலாண்மை, மின்சார சிக்கனம் அனைத்தையும் அறிந்து கொண்டதாகவும் கூறினர். அங்கு உள்ள மாணவர்களின் தரம், தனிமனித ஒழுக்கம் குறித்து அறிந்து கொண்டதாகவும், அவற்றை தமிழக மாணவர்களுக்கும், சக ஆசிரியர்களுக்கும் சொல்லிக் கொடுப்போம் என்றும் உறுதி அளித்தனர்.