பரம்பரை நிலமோ, வாங்கிய நிலமோ.. உங்கள் சொத்து புறம்போக்காக மாறும்? - உஷார்... இப்பவே செக் பண்ணுங்க

Update: 2024-09-22 06:22 GMT

தென்காசியில் தனியார் நிலங்கள் அரசு புறம்போக்காக மாற்றப்பட்டு உள்ளதாகவும், கவனக் குறைவாக இருந்தால் சொத்துக்களை இழக்கும் அபாயம் உள்ளதாகவும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி.எஸ்.ஆர் வெங்கட்ரமணா எச்சரிக்கை விடுத்துள்ளார். அதைப்பற்றி பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

தென்காசி தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான டி.எஸ்.ஆர் வெங்கட்ரமணா, மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தென்காசி நகரில் உள்ள தனி நபர்களுக்கு சொந்தமான சுமார் ஆயிரம் ஏக்கர் நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்களாக மாற்றப்பட்டு கணினி வரைபடத்தில் காட்டுவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், தனக்கு சொந்தமான இடங்களை, தனது வாரிசுகளுக்கு எழுதி வைக்க முடிவு செய்து சார்பதிவாளரை அணுகியதாகவும், அப்போது தனது நிலங்கள் அரசு புறம்போக்கு நிலமாக கணினியில் காட்டியதை கண்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்தார்...

அதிகாரிகளிடம் கேட்டபோது, வரி இல்லாத நிலங்களை எல்லாம் கணினி புறம்போக்கு நிலமாக பதிவு செய்து கொண்டதாகவும், இது கணினியின் தவறு என அதிகாரிகள் விளக்கம் அளித்ததாகவும் தெரிவித்தார்...

இதன் பிறகு மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்ததாகவும், அதன்பிறகு தங்கள் தவறை ஒத்துக் கொண்ட அதிகாரிகள், அரசு புறம்போக்காக இருந்த தனது நிலங்களை தனது பெயரில் பட்டா மாற்றி தந்ததாகவும் டி.எஸ்.ஆர் வெங்கட்ரமணா தெரிவித்தார்...

நிலம் வைத்திருக்கும் அனைவருமே, இ-சேவை மையத்திற்கு சென்று பட்டாவை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அரசு புறம்போக்கு என காட்டினால், தங்களது பெயருக்கு பட்டாவை மாற்றிக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார். இல்லையெனில் நிலம் வைத்திருக்கும் அனைவரும் தங்களது நிலங்களை இழக்கும் அபாயம் உள்ளதாகவும் டி.எஸ்.ஆர் வெங்கட்ரமணா எச்சரித்துள்ளார்.

ஏற்கனவே அரசு அதிகாரிகள் செய்யும் பிழைகளால், பட்டா வாங்குவதில் சாமானியர்கள் ஏராளமான இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் அதிகாரிகளின் கவனக்குறைவால், பொதுமக்களுக்கு சொந்தமான நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்களாக மாற்றியதாக வெளியான தகவல் மக்களிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்