திடீரென கேட்ட பெரும் சத்தம்..சரிந்து விழுந்த மின் கம்பங்கள்..ஸ்ரீரங்கம் கோவிலில் பரபரப்பு

Update: 2023-08-05 13:50 GMT

பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் 108 திருத்தலங்களில் முதன்மையானதாகவும், தலைச்சிறந்த தலமாகவும் விளங்கும் திருச்சி ஸ்ரீரங்கம், 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் என கூறப்படுகிறது.

21 கோபுரங்களும் 156 ஏக்கர் பரப்பளவும் கொண்டு இந்த பிரம்மாண்ட கோவில் உலகின் இரண்டாவது பெரிய கோவில் என்று சொல்லப்படுகிறது.

இத்தனை தனிச்சிறப்புகளை கொண்ட இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது.

கோவிலின் கிழக்கு வாசல் பகுதியில் உள்ள கோபுரத்தில் முதல் மற்றும் இரண்டாவது அடுக்குகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த கிழக்கு வாசல் கோபுரத்தில் வழியாக தான் பக்தர்கள் திருக்கூவிலுக்கு வந்து செல்வர். மேலும் அங்குள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் இவ்வழியே தான் கடந்து செல்வர்.

இதனால் விரிசலால் விபத்து ஏற்படாமல் இருக்க, தற்காலிகமாக விரிசல் ஏற்பட்ட இடத்தில் கட்டைகள் வைக்கப்பட்டன.

மேலும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் தான் நள்ளிரவு 1.50 மணிக்கு, முதல் நிலையில் இருக்கக்கூடிய சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதனால் கோபுரத்தில் இருந்த சிற்பங்கள் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர்கள், மின்கம்பங்கள், சரிந்து விழுந்துள்ளது.

நள்ளிரவில் ஆள்நடமாட்டம் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் அரங்கேறிய போது மின் தடை ஏற்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

விபத்து பகுதியில் இடிந்து விழுந்த பாகங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்ற நிலையில், அங்கு பொதுமக்கள் செல்லாமல் இருக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கோவில் கோபுரம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதகாக 67 லட்சம் ரூபாய் செலவில் பராமரிப்பு பணிகளை கோவில் நிர்வாகம் மேற்கொள்ளவிருந்தது.

தற்போது ஏற்பட்ட அசம்பாவிதத்தால், சுமார் 98 லட்சம் ரூபாய் செலவில் பராமரிப்பு பணிகள் உடனடியாக மேற்கொள்ளப் படும் என கோவில் இணை ஆணயர் சிவகுமார் உறுதியளித்துள்ளார்.

ஆறு மாதத்திற்கு இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், இப்பகுதி முழுவதும் போக்குவரத்து தடை விதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இடிந்து விழுந்த பகுதியில் உடனடியாக சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் போதிய முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்