மதுரை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது...
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து மதுரை மாவட்டத்தில் உள்ள முதல் போக பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. விநாடிக்கு 900 கன அடி வீதம் பாசன கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் மதுரை முழுவதும் கடந்த சில நாள்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக விலை நிலங்கள் அனைத்திலும் ஈரப்பதம் அதிகரித்த காரணத்தால், வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மதுரை மாவட்டத்தில் மழை பெய்வது நின்று தண்ணீர் தேவை இருக்கும் போது விவசாயத்திற்கு மீண்டும் தண்ணீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதுவரையில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை கொண்டு வைகை அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் தற்போது 58 அடியாக உள்ளது. தண்ணீர் தேங்கும் பரப்பளவு சுமார் 5 கிலோ மீட்டர் சதுர பரப்பளவாக விரிவடைந்துள்ளது. இதன் காரணமாக மீன்கள் பிடிபடுவது கணிசமாக சரிந்துள்ளது. ஒருநாளைக்கு ஒரு டன் அளவில் கிடைத்த மீன் தற்போது 300 கிலோ வரையிலேயே பிடிபடுகிறது. இதனால் விடுமுறை நாளான இன்று மீன்கள் வாங்க வந்த மக்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர். வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் சென்றதால் மக்கள் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்...