``ஐயோ அண்ணே; காப்பாத்துங்க'' - மாணவியின் அதிர்ச்சி ஆடியோ - பயங்கர சத்தம் - வெளிவந்த பேரதிர்ச்சி

Update: 2024-09-12 16:40 GMT

மதுரையில் பெண்கள் தங்கும் விடுதியில் ஃப்ரிட்ஜ் சிலிண்டர் வெடித்து 2 பெண்கள் உயிரிழந்த சம்பவத்தின் பரபரப்பு பின்னணியை பார்க்கலாம் விரிவாக..


மதுரை மாநகர் பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்ராபாளையம் தெரு பகுதியில் அமைந்துள்ள பெண்கள் தங்கும் விடுதி ஒன்றில் திடீரென அதிகாலை 4 மணியளவில் கரும்புகை வெளியேறியது..

சுமார் 40 பேருக்கு மேல் வசித்து வரும் தங்கும் விடுதியில் என்ன நேர்ந்ததோ ? என அறியாமல் பதறிப்போன அக்கம்பக்கத்தினர், தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், 2 மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அப்போது தான், விடுதியில் இருந்த ஃப்ரிட்ஜ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது தெரிய வந்ததுள்ளது..

அதிலிருந்து வெளியேறிய நச்சு புகையை சுவாசித்த 5 பேர் மயங்கி விழ, பரிமளா, சரண்யா என்ற 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்....

உயிருக்கு போராடி வந்த 3 பேரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், விபத்தின் போது ஜனனி என்ற கல்லூரி மாணவி தனது அண்ணனுக்கு போன் செய்து பதறிய ஆடியோ வெளியாகி பதைபதைக்க செய்துள்ளது..

இந்த ஒற்றை ஆடியோ விபத்தின் கோரத்தை கண்முன் காட்டி விட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர் அக்கம்பக்கத்தினர்....

முதற்கட்டமாக ஃப்ரிட்ஜ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இருவரும் உயிரிழந்தது தெரிய வந்துள்ள நிலையில், திடீர் நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சூழலில் தான், தங்கும் விடுதி அமைந்துள்ள கட்டிடம் மிகப்பழமையான கட்டிடம் என்றும் இது தொடர்பாக மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், அதனையும் மீறி விடுதி செயல்பட்டு வந்ததாகவும் தகவல் வெளியானது..

இது மட்டுமன்றி, ஏற்கனவே பல ஆண்டுகளாக குத்தகைக்கு விடப்பட்டு இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது...

மேலும் தீ விபத்து நடந்த இடத்தில் கோட்டாட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது ஆய்வு செய்த போது, போதிய பாதுகாப்பு இல்லாத சூழலில் தங்கும் விடுதி செயல்பட்டு வந்தது அம்பலமானது.. அத்துடன் அவசர கால பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல், சிறைச்சாலை போல் செயல்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது..

ஏற்கனவே மாநகராட்சி சார்பில் உரிய எச்சரிக்கை நோட்டீஸ் விடுக்கப்பட்ட நிலையிலும் அதனை அலட்சியமாக கருதியதால் இது போன்ற விபத்தில் உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இச்சூழலில், விடுதி வார்டனான புஷ்பாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், விடுதியில் தங்கியிருந்தவர்களின் விவரங்களை பெறுவதில் சிரமம் ஏற்பட்டது..

பின்னர் விடுதியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் சங்கீதா, மதுரையில் உள்ள அனைத்து விடுதிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

விபத்து தொடர்பாக விசாரணை தொடரும் நிலையில், அலட்சியமாக செயல்பட்ட விடுதி உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவம் மதுரை மாநகரில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இனி இது போன்ற விபத்துகள் நடக்காமல் தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் அப்பகுதிவாசிகள்..

Tags:    

மேலும் செய்திகள்