அரசு பள்ளி பிள்ளைகளுக்கு காவலாக நிற்கும் மதுரை பாட்டி! ஒன் வுமன் ஆர்மி பாண்டியம்மாளால்

Update: 2024-06-29 11:08 GMT

பேருந்துக்காகக் காத்திருக்கும் அரசுப்பள்ளி மாணவிகளை மூதாட்டி ஒருவர் பத்திரமாக ஏற்றி விட்டு அறிவுரைகூறி அனுப்பி வைக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

"பிள்ளைகள சூதானமா ஏத்திட்டு போய் சூதானமா இறக்கி விடனும் சரியா..." என்று அன்பான அதட்டலுடன் கண்டக்டருக்கு ஆர்டர் போடும் இவர்தான் பாண்டியம்மாள்...

மதுரை யா.ஒத்தக்கடை அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஒப்பந்தப் பணியாளரான பாண்டியம்மாள்... பள்ளி விட்டதும்... மாணவிகளுக்கு முன்னால் குடுகுடுவென ஓடி வந்து வாசலில் நின்று கொள்வார்...

"ஓரங்கட்டு...ஓரங்கட்டு...புள்ளைங்க நிக்குதுல்ல..."

என்று அங்கு வரும் அரசுப் பேருந்துகளை வரிசையாக நிறுத்தி "எங்க ஸ்கூல் பிள்ளைங்கள ஏத்திட்டுப் போங்கப்பா" என்று பள்ளி மாணவிகளைத் தன் பேத்திகளைப் போல் பொறுப்புடன் அவரவர் ஊருக்கு பத்திரமாக ஏற்றி விடுவார்...

பேருந்துப் படிக்கட்டில் மாணவிகள் நின்றுவிட்டால் படுகோபம் வந்து விடும் பாண்டியம்மாளுக்கு...அதட்டி உருட்டி மாணவிகள் உள்ளே போகும் வரை பேருந்தை எடுக்க விடமாட்டார் பாண்டியம்மாள்...

பேருந்துகளில் ஏற்றி விடும்போது மட்டும்தான் பாட்டி பாண்டியம்மாளின் அதட்டல் உருட்டலெல்லாம்... மாணவிகள் உள்ளே சென்றுவிட்டால் பாசமழை பொழிவார்...

ஒன் வுமன் ஆர்மியாக செயல்படும் பாண்டியம்மாள் ஒவ்வொரு மாணவியையும் அவரவர் செல்லும் பேருந்துகள், ஷேட் ஆட்டோக்கள், மினி பஸ்களில் ஏற்றி விட்டு பள்ளி வளாகம் காலியான பிறகுதான் நிம்மதி கொள்வார்...

தலைமை ஆசிரியை மற்றும் மற்ற ஆசிரியர்களும் மாணவிகளுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைக்கின்றனர்...

பாட்டி பாண்டியம்மாள் பள்ளியில் உள்ள செடிகளைப் பராமரிக்க ஆயிரம் ரூபாய் ஊதியத்திற்கு வந்து தற்போது 15 ஆண்டுகளாக இதே பள்ளியில் பணிபுரிந்து மரம், செடி கொடிகளைப் போலவே மாணவிகளைப் பாதுகாக்கும் அரணாக உள்ளார்...

பாதுகாப்பு அரண் என ஏன் கூறுகிறோம் தெரியுமா?... 1 மணி நேரத்திற்கு ஒருமுறை பாண்டியம்மாள் பள்ளியைச் சுற்றி ரவுண்ட்ஸ் வருவார்... பள்ளி சுற்றுச் சுவர் அருகே சந்தேகப்படும்படியாக யாரேனும் நின்று கொண்டிருந்தால் அவர்கள் யார் என்ன என விசாரித்து, சரியாகப் படவில்லை என்றால் உடனே போலீசுக்குத் தகவல் கொடுக்கும் ஏஜென்ட்டாகவும் உள்ளார்...

"பாட்டிதான் வர்றாங்க...பதறவிடப் போறாங்க..." என்பதைப் போல் ட்ரைவர், கண்டக்டர் துவங்கி மாணவிகள் வரை அனைவரையும் அன்பாக மிரட்டி உருட்டும் பாட்டி பாண்டியம்மாளுக்கு அப்பள்ளியில் ஒருபெரிய ரசிகர் பட்டாளமே உண்டு...

இடையில் எங்கும் இறங்கக் கூடாது என்று கண்டிப்புடன் அறிவுரை கூறும் பாட்டி பாண்டியம்மாளால் தான் மாணவிகள் பத்திரமாக தங்கள் வீடுகளுக்குச் செல்கின்றனர்... பெற்றோர்களும் நிம்மதியடைகின்றனர்... 

Tags:    

மேலும் செய்திகள்