ஆன்லைனில் இந்த விளம்பரத்தை பார்த்தீங்களா? - மக்களே உஷார்... போலீசார் எச்சரிக்கை

Update: 2024-10-24 01:52 GMT

ஆன்லைனில் இந்த விளம்பரத்தை பார்த்தீங்களா? - மக்களே உஷார்... போலீசார் எச்சரிக்கை

தீபாவளி பண்டிகை நெருங்கும் சூழலில், சமூக வலைத்தளங்கள் மூலம் பட்டாசு விற்பனை செய்து மோசடி செய்யும் கும்பலின் அட்ராசிட்டியும் அதிகரித்துள்ளதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். மோசடிகளில் இருந்து தப்புவது எப்படி ? சைபர் க்ரைம் போலீசார் கூறுவது என்ன ? என்பதை பார்க்கலாம் விரிவாக...

தீபாவளி பண்டிகையின் வைப் தொடங்கி விட்டதால், ஷாப்பிங்கில் பிசியாக தொடங்கி விட்டனர் மக்கள்...

புத்தாடை, பலகாரங்கள், என பண்டிகை கொண்டாட ஆயத்தமாகி வரும் மக்கள், பட்டாசுகளை வாங்கவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்..

மக்களின் இந்த ஆர்வத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள சமூக வலைத்தளங்களில் வலம் வர தொடங்கி விட்டன சில மோசடி கும்பல்கள்...

குறிப்பாக மக்கள் அதிகம் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் பேஸ்புக் போன்ற பிரபல சமூக வலைத்தளங்களில், பட்டாசுகளுக்கு அதிக தள்ளுபடி கொடுப்பதாக கூறி பல விளம்பரங்கள் உலாவுகின்றன...

இப்படி சிலர் சமூக வலைத்தளம் மூலம், மக்களை தொடர்பு கொண்டு போலி இணையதளங்களில் பட்டாசுகளை வாங்க அறிவுறுத்துகின்றனர்.

ஆனால், பணம் செலுத்தியவுடன், ஆர்டர் செய்த பொருட்கள் நம்மை வந்து சேரும் என்பதில் நிச்சயமில்லை. இவ்வாறான தளங்களை பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் பணத்துடன் தலைமறைவாகிவிடுகிறார்கள்.

மேலும், இந்த வலைதளங்களில் உள்ள தங்கள் தகவல்களையும் நீக்கிவிடுவதால், பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பணத்தை பறிகொடுக்க நேரிடுகிறது.

கூடுதலாக, பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் தனிப்பட்ட நிதி தகவல்களைப் பகிர்வதன் மூலம் அவர்களது சுயவிவரங்களை மோசடிகாரர்கள் தவறான செயல்களுக்கு பயன்படுத்த வழிவகுக்கிறது.

குறிப்பாக பண்டிகைக்காலங்களில் இதுபோன்ற மோசடிகளுக்கு இறையாகும் போது பொது மக்களுக்கு ஏற்படும் மனஉளைச்சல் அதிகமாகவே இருக்கிறது.

இப்படி கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்கள் மட்டும் தேசிய சைபர் கிரைம் ரிப்போர்ட்டிங் போர்ட்டலில், பட்டாசு விற்பனை மோசடி தொடர்பாக 17 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எச்சரிக்கின்றனர் சைபர் கிரைம் போலீசார்.

மேலும் இவ்வகையான மோசடிகளில் இருந்து தப்பிக்க பாதுகாப்பு ஆலோசனைகளையும் வழங்கியுள்ளனர்

ஆன்லைன் விற்பனையாளர்களின் நம்பகத்தன்மையை சரிபார்த்து முறையான முகவரிகள் மற்றும் தகவல் தொடர்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், வழக்கத்திற்கு மாறாக குறைந்த விலை சலுகைகள் மற்றும் வரையறுக்கப்பட்ட நேர சலுகைகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

தள்ளுபடிகள் உண்மையானதா என்பதை உறுதி செய்ய, நன்கு அறியப்பட்ட இணையத்தளங்களில் விலைகளை சரிபார்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்துகின்றனர்.

பெரும்பாலும் நன்கு அறியப்பட்ட பிராண்டுகள் மற்றும் அதிகாரப்பூர்வ இணையத்தளங்களில் இருந்து வாங்கினால் மோசடிகளை தவிர்க்கலாம் என்றும், மோசடிக்கு ஆளானால் உடனே புகாரளிக்கும் படி தெரிவித்துள்ளனர்.

1930 என்ற சைபர் கிரைம் கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலோ புகாரை பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது...

மோசடிகளை தவிர்க்க சமூக வலைத்தளங்களை நம்பாமல், நேரில் சென்று பண்டிகைக்கான பொருட்களை வாங்குவதும் சிறந்தது என்பது பலரின் கருத்தாக உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்