சென்னை ஆர்.கே.நகரில், அதிக சத்தம் காரணமாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சியை நிறுத்திய போலீசார், நிர்வாகியை அழைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிறிஸ்துமஸ் விழாவையொட்டி த.வெ.க வடசென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் கடந்த வாரம் சென்னை துறைமுகம் அருகே விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியை, ஆர்.கே.நகர் காவல்நிலையம் எதிரில் உள்ள பார்ட்டி ஹாலில் நடத்த, த.வெ.க. நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது, அதிக சத்தம் எழுப்பியதாக கூறி, காவல் நிலையத்தில் இருந்து வந்த போலீசார், நிகழ்ச்சியை நிறுத்தினர். மேலும், த.வெ.க. மாவட்ட தலைவர் வேல் என்பவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று, சிறைக்கு அனுப்பப் போவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், காவல் நிலையம் முன்பு த.வெ.க. நிர்வாகிகள் திரண்டனர். இதையடுத்து, ஒலியை குறைத்து வைத்து நிகழ்ச்சி நடத்த வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியதை அடுத்து, 2 மணி நேரம் கழித்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது.