"விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்கும்" - மை வி3 நிறுவன உரிமையாளர் விசாரணை
கோவையை தலைமையிடமாக கொண்டு Myv3 Ads என்ற செயலியை சக்தி ஆனந்தன் என்பவர் நடத்தி வருகிறார். இதில் தினமும் 2 மணி நேரம் விளம்பரம் பார்ப்பதன் மூலமும், புதிய நபர்களை சேர்ப்பதன் மூலமும் அதிக வருமானம் பார்க்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், செலுத்தும் பணத்திற்கு ஆயுர்வேத மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை நம்பி, ஆயிரக்கணக்கான மக்கள் லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். இதனிடையே, மருத்துவர்களின் பரிந்துரையின்றி ஆயுர்வேத மருந்துகள் வழங்குவதாக புகார் எழுந்ததை அடுத்து, Myv3 Ads நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக Myv3 Ads உரிமையாளர் சக்தி ஆனந்தனுக்கு போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில், அவர் தனது வழக்கறிஞர்களுடன் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் போலீசார் 4 மணி நேரத்துக்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.