ஆனைமலையில் ரோடு போடும் விவகாரம்.. ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு | Anaimalai | High Court
ஆனைமலை புலிகள் சரணாலயம் வழியாக புதிய சாலை அமைக்க தடை கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனைமலை புலிகள் சரணாலயம் அமைந்துள்ள பகுதியில், திருமூர்த்தி மலையில் இருந்து குருமலைக்கு 49 லட்சம் ரூபாய் செலவில் புதிய சாலை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை அமைக்க தடை விதிக்கக் கோரி கவுதம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே காங்கிரீட் சாலை உள்ள நிலையில் புதிய சாலை அமைக்க அனுமதித்தால், விலங்குகள் வேட்டையாடப்படவும், மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படவும் வாய்ப்பாக அமைந்து விடும் என மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி விசாரணைக்கு வந்த போது, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் சாலை அமைக்க அனுமதித்தால், வயநாடு போல், நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.