அதிகரிக்கும் கோடையின் தாக்கம் : வேகமாக வறண்டு வரும் அணைகள்
அணைகள் வறண்டு விட்டதால் விவசாயம் மற்றும் குடிநீருக்கு தட்டுப்பாடு அதிகரிக்கும் நிலை உருவாகயுள்ளது.
தமிழகத்தின் பெரிய அணையான மேட்டூர் அணையில் நீர்மட்டம் 51 அடியாக குறைந்துள்ளது. அதனால் பண்ணவாடி நீர் தேக்கத்தில் மூழ்கியிருந்த நந்திசிலை மற்றும் கிறிஸ்தவ ஆலயத்தின் இரட்டை கோபுரம் ஆகியவை வெளியே தெரிகின்றன.மேட்டூர் அணை கட்டப்பட்ட போது அங்கிருந்து வெளியேறிய மக்கள் விட்டுச் சென்றவை அவை. அணையின் நீர் மட்டம் 80 அடிக்கு கீழே குறையும் போது முதலில் கிறித்துவ ஆலயத்தின் கோபுரம் தெரியத்தொடங்கும். 71 அடியாக குறையும் போது ஜலகண்டேசுவர் ஆலயம் தெரியத்தொடங்கும். தற்போது அணையின் நீர்மட்டம் 51 அடியாக குறைந்ததையடுத்து பண்ணவாடி நீர் தேக்கத்தில் மூழ்கியிருந்த நந்திசிலை மற்றும் கிறிஸ்தவ ஆலயத்தின் இரட்டை கோபுரம் ஆகியவற்றின் பெரும் பகுதி வெளியே தெரிகிறது.தென்மாவட்டங்களை வளப்படுத்தி வரும் தாமிரபரணியும் தற்போது வறண்டு காட்சி அளிக்கிறது. நெல்லை மாவட்டத்தில் அதிக கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 15 அடி அளவிற்கு மட்டுமே தண்ணீர் உள்ளது.சேர்வலாறு அணையில் 40 அடி நீர் மட்டுமே உள்ளது. இப்பகுதி மக்களுக்கு சற்றே ஆறுதல் அளிக்கும் வகையில் மணிமுத்தாறு அணையில் மட்டும் தற்போது 70 அடிக்கு தண்ணீர் உள்ளது.நெல்லை மாவட்டத்தில் கடையம் , ஆழ்வார்குறிச்சி உள்ளிட்ட பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குவது கடனா நதி மற்றும் ராமநதி அணைகள் தற்போது இரண்டு அணைகளும் வறண்டு பாலைவனம் போல் காட்சியளிக்கின்றன. பொதுமக்களின் போராட்டத்திற்கு பிறகு அணையை தூர்வாருவதாக கூறி சில ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு நாட்கள் மட்டுமே பணி நடந்த நிலையில், அந்த பணி கிடப்பில் போடப்பட்டது. அதன்பின்னர் இதுவரை தூர்வாரப்படாததால் அணைகள் நீரின்றி பாலைவனம் போல் காட்சியளிக்கின்றன