தலச்சேரியில் ஒரே கட்டடத்தில் 3 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களாக நீதிமன்றத்திலுள்ள வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் என சுமார் 100 பேருக்கு காய்ச்சல், உடல்வலி மற்றும் அலர்ஜி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மருத்துவ குழுவினர் நீதிமன்றத்திற்கு வந்து பரிசோதனை செய்தனர். கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் நீதிபதி ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் மற்றும் உமிழ்நீர் சேகரிக்கப்பட்டு ஆலப்புழா வைராலஜி ஆய்வகத்திற்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இதில் நேற்று ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மேலும் பலரை பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. இந்நிலையில் பரிசோதனை நடத்தப்பட்ட13 மாதிரிகளில் மேலும் 7 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 8 பேருக்கு ஜிகா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தலச்சேரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கொசு ஒழிப்பு பணிகள் துவங்கியுள்ள நிலையில், 58 பேருக்கு இதே போன்ற அறிகுறி இருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து அவர்களின் மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.