தெற்கே உதித்த இந்திரா காந்தி 2.O.. முதல் ஸ்கெட்ச்.. பாஜகவை மிரட்டும் இரட்டை குழல் துப்பாக்கி

Update: 2024-10-24 07:56 GMT

தெற்கே உதித்த இந்திரா காந்தி 2.O.. முதல் ஸ்கெட்ச்.. பாஜகவை மிரட்டும் இரட்டை குழல் துப்பாக்கி

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி முதல் முறையாக தேர்தல் அரசியலில் களம் இறங்கியிருப்பது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு

2014-ல் மத்தியில் பா.ஜ.க ஆட்சியில் அமர, பல மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுக்க, இந்திரா காந்தி சாயலில் இருக்கும் பிரியங்கா அரசியலுக்கு வர வேண்டும் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

அதுவரையில் தாயின் ரேபரேலி, சகோதரனின் அமேதி தொகுதிகளில் பிரசாரம் செய்ததோடு நின்றுக் கொண்டார் பிரியங்கா... 2019 நாடாளுமன்ற தேர்தலையொட்டி உத்தரபிரதேச மாநில கிழக்கு பிராந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளராக அரசியலில் இறங்கினார். அப்போது அவர் குறிவைத்த 2022 உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தல், அவருக்கு கைக்கொடுக்கவில்லை.

ஆனால் மனம் தளராது மற்ற மாநிலங்களில் பிரசாரம் சென்றார். அதில் இமாச்சல பிரதேசம், கர்நாடகாவில் அவரது பிரசாரம் காங்கிரஸ் வெற்றிக்கு உதவியதாக பார்க்கப்பட்டது.

அதுவே டிசம்பரில் 5 மாநில தேர்தலில் தெலங்கானாவில் மட்டும் காங்கிரஸ் வென்றது. வடமாநிலங்களில் ஏற்பட்ட தோல்வி அவரை பின்வாங்க செய்யவில்லை.. 2024 தேர்தல் களத்திற்கு தயாரான பிரியங்கா, காங்கிரசை விளாசிய பிரதமர் மோடியை பதிலடியால் விளாசினார். மாங்கல்யம் விவகாரம்... குடும்ப சொத்து... உள்ளிட்ட விவகாரங்களில் மோடியை அவர் கார்னர் செய்த விதம் பெரிதும் பேசப்பட்டது.

ரேபரேலி எம்.பி.யாக இருந்த சோனியா மாநிலங்களவை எம்.பி.யாக, அங்கு பிரியங்கா களமிறங்கலாம் என பார்க்கப்பட்டது. ஆனால் வயநாட்டில் போட்டியிட்ட ராகுலுக்கு 2-வது தொகுதியாக ரேபரேலி வழங்கப்பட்டது.

அப்போது காந்தி குடும்ப தொகுதியான அமேதியோடு, ரேபரேலியும் எங்களுக்குதான் என மார்தட்டியது பாஜக. ஆனால்... அது நான் இருக்கும் வரையில் நடக்காது என இரு தொகுதிகளிலும் மையமிட்டார் பிரியங்கா... இரு தொகுதிகளிலும் காங்கிரசுக்கு அமோக வெற்றி வசமானது.

2024 தேர்தல் முடிவில் காங்கிரஸ் 99 இடங்களை வெல்ல, பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காமல் தடுத்தது இந்தியா கூட்டணி. இதன் தொடர்ச்சியாக 2027 உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலை குறிவைக்கும் காங்கிரஸ், ராகுலை ரேபரேலி எம்.பி.யாக இருக்க செய்ய விரும்புவதாக கூறப்பட்டது. வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி.

அப்போது ராகுல் ரேபரேலியில் எம்.பி.யாக தொடர்வார் என்ற காங்கிரஸ், தொண்டர்களுக்கு இனிப்பு செய்தியாக, வயநாட்டில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என அறிவித்தது. மக்களுக்காக கடினமாக உழைப்பேன் என்ற பிரியங்கா, இருவரும் ரேபரேலியிலும், வயநாட்டிலும் இருப்போம் என்றார். தாய் சோனியா காந்தி, சகோதரர் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோருடன் வேட்புமனுவையும் தாக்கல் செய்தார்.

2026 ஆம் ஆண்டு கேரளாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. மாநிலத்தில்... காங்கிரஸ் கூட்டணி - இடதுசாரி கூட்டணி மோதலுக்கு மத்தியில் பாஜகவும் 19.24 சதவீத வாக்குகளை வசமாக்கிவிட்டது. தேசியக் கட்சி களமாடும் கேரளாவில் பாஜகவுக்கு செக் வைக்க வேண்டிய கட்டாயம் காங்கிரசுக்கும் இருக்கிறது. இப்போது பிரியங்கா வயநாடு எம்.பி. ஆனால்.. 2026 தேர்தலில் காங்கிரசுக்கு பக்க பலமாக இருக்கும் என காங்கிரசார் நம்புகிறார்கள்.

முதல் முறையாக பிரியங்கா தேர்தல் அரசியலில் களமிறங்குவதால் காங்கிரசாரும் உற்சாகமாகியிருக்கிறார்கள். அந்த உற்சாகம் அவர்களது பேரணியில் தென்பட்டது

பாஜகவுக்கு பக்காவாக ஸ்கெட்ச் போட, வடக்கில் ராகுல்... தெற்கில் பிரியங்கா என தலைமை காய் நகர்த்துவதாக அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்