அம்பலப்பட்ட அல்லு அர்ஜுனின் இன்னொரு முகம்.. விஷயம் வெளியே வந்ததும் வெறியில் சுக்குநூறான வீடு

Update: 2024-12-23 04:46 GMT

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டில் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள், கற்களையும், தக்காளிகளையும் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறித்து பார்க்கலாம்.. விரிவாக..

ஹைதராபாத்தில் உள்ள நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டில் அத்துமீறி நுழைந்த சிலர் கற்கள், தக்காளியை வீசி தாக்குதல் நடத்தியதோடு வீட்டிற்குள் பூந்தொட்டிகளை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நவம்பர் 4ஆம் தேதியன்று புஷ்பா 2 படத்தின் பிரீமியர் காட்சி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் திரையிடப்பட்டபோது, படம் பார்க்க வந்திருந்த குடும்பத்தோடு வந்திருந்த ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

உயிரிழந்த பெண் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் அளிப்பதாக அல்லு அர்ஜுன் தரப்பில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல, அப்பெண்ணின் மூளைச்சாவு அடைந்த மகன், தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கான மருத்துவ செலவுகளையும் கவனித்துக் கொள்வதாக அல்லு அர்ஜுன் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து, தெலங்கானா மாநில சட்டப் பேரவையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. காரின் மீது ஏறி கூட்டத்தின் நடுவே கைகளை அசைத்தவாறே அல்லு அர்ஜுன் சென்றதாக கூறிய முதல்வர் ரேவந்த் ரெட்டி, இவரெல்லாம் எந்த மாதிரியான மனிதர் என ஆவேசமாக கேள்வி எழுப்பி இருந்தார்.

அதோடு, சிறையில் இருந்து வீடு திரும்பிய ஒருவரை பல பிரமுகர்களும் தேடிப் போய் பார்த்த நிலையில், மருத்துவமனையில் இருக்கும் சிறுவனை யாரும் ஏன் பார்க்கவில்லை என்பன உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எழுப்பினார்.

இந்த சூழலில் தான், முதல்வரின் பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக, செய்தியாளர்களிடம் பேசிய அல்லு அர்ஜுன், தனது 20 ஆண்டுகால சினிமா கெரியரில் எடுத்த நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த பார்ப்பதாகவும், தன் மீது திட்டமிட்டு பொய் வழக்குப் போடப் பார்ப்பதாகவும், 15 நாட்களாக வீட்டில் அவதிக்குள்ளான தான், அரசுடன் எந்த மோதலையும் விரும்பவில்லை எனவும் கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்த சூழலில், ஹைதராபாத்தில் உள்ள அல்லு அர்ஜுனின் வீட்டில் போராட்டக்காரர்கள் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது மேலும் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போல, பரபரப்பை எகிற வைத்திருக்கிறது.

இதைத்தொடர்ந்து, தனது ரசிகர்கள் என யாராவது தவறான பதிவுகளை வெளியிட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அல்லு அர்ஜூன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் எந்த விதமான தவறான செயல்களில் ஈடுபட வேண்டாம். எப்போதும் போல் தங்கள் உணர்வுகளை பொறுப்புடன் வெளிப்படுத்துமாறு எனது ரசிகர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

போலி ஐடிகள் மற்றும் போலி சுயவிவரங்கள் மூலம் எனது ரசிகர்கள் என தவறாக சித்தரித்து, தவறான பதிவுகளை யாராவது வெளியிட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரசிகர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்