நாடு முழுவதும் 41 இடங்களில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாம்களில், பல்வேறு மத்திய அரசின் துறைகளில் சுமார் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்வில் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டார். எல்லை பாதுகாப்பு படை, துணை ராணுவ படை, பல்வேறு மத்திய அரசு படைகளில் 51 ஆயிரம் பேர் புதிதாக இணையவுள்ளனர்... துணை ராணுவ படையின் ஆட்தேர்வு நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, இதற்கு முன்பு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெற்று வந்த தேர்வுகள் தற்போது 13 மாநில மொழிகளிலும் நடைபெறுவதாக தெரிவித்தார். அரசு மற்றும் நிர்வாகத்தில் மாற்றங்களை கொண்டு வரும் தனது திட்டத்திற்கு இளைஞர்கள் மிகப்பெரும் வலிமையாக திகழ்வதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, புதிதாக பணியமர்த்தப் பட்டவர்கள் பொதுமக்களுக்கு பலனளிக்கும் முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். இந்த தசாப்தத்தில் உலகின் முதன்மை பொருளாதாரம் கொண்ட 3 நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த உத்தரவாதத்தை கொடுக்கும் போது அதனை முழு பொறுப்புடன் நிறைவேற்றுவேன் என உறுதியளித்த அவர், ஆட்டோமொபைல் மற்றும் பார்மா துறை நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வருவதாகவும், இந்த துறைகள் வரும் நாட்களில் இளைஞர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எனவும் தெரிவித்தார்.