ஒட்டு மொத்த உலகத்திற்கும் இணைப்பு மற்றும் நீடித்த வளர்ச்சிக்கும் இந்திய மத்திய கிழக்கு, ஐரோப்பா பொருளாதார வழித்தடம் புதிய திசையை வழங்கும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில், இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பிய இணைப்பு பொருளாதார வழிதடத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியா - மத்திய கிழக்கு நாடுகள் - ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் பொருளாதார ஒருமைப்பாட்டிற்கு இத்திட்டம் மிகச் சிறந்த ஊடகமாக திகழும் என்றார். இந்த வழித்தடம் ஒட்டுமொத்த உலகிற்கும் இணைப்பு மற்றும் நீடித்த வளர்ச்சிக்கு புதிய திசையை வழங்கும் என்றும் பிரதமர் மோடி கூறினார். இந்த திட்டம் மிகப்பெரிய டீல் என அதிபர் ஜோ பைடன் பாராட்டு தெரிவித்தார். அங்கோலாவில் இருந்து இந்திய பெருங்கடல் வரையிலான புதிய ரயில் திட்டத்தில் அமெரிக்கா முதலீடு செய்யும் என்ற பைடன், இது மாற்றத்தை ஏற்படுத்தும் முதலீடு என்றார். தொடர்ந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்த வழித்தடத்தை பாராட்டினர்.டெல்லியில் நடைபெற்று வரும் ஜி-20 உச்சி மாநாட்டின் முக்கிய நிகழ்வான டெல்லி ஜி20 பிரகடனம் அனைத்து உறுப்பு நாடுகளாலும் ஒருமனதாக ஏற்கப்பட்டுள்ளது. 37 பக்கங்கள் கொண்ட டெல்லி பிரகடனம் அனைத்து நாடுகளாலும் ஒரு மனதாக ஏற்கப்பட்டுள்ளது. வலுவான நீடித்த சமநிலை கொண்ட உள்ளடங்கிய வளர்ச்சியை துரிதப்படுத்துவது நீடித்த வளர்ச்சிக்கான 2030 அஜெண்டாவை முழுமையாகவும் நடைமுறைப்படுத்துவதை துரிதப்படுத்துவது என கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் போர் மற்றும் மோதல் காரணமாக பாதகமான தாக்கங்கள் குறித்த ஆழ்ந்த கவலைகளை கவனத்தில் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. போரினால் உலக பொருளாதாரத்தில் ஏற்படுத்தி உள்ள பாதகமான விளைவுகளை களைய எடுக்கப்படும் முயற்சியில், அனைவரும் ஒன்றுபட்டு இருப்பதாகவும், இன்றைய யுகம் போருக்கான யுகம் அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதங்களின் பயன்பாடு மற்றும் அச்சுறுத்தல் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல என்றும் கூறப்பட்டுள்ளது.