ஆண்டின் இறுதியில் அதிர்ச்சி - சிதறிய விமானம்... `பயணி அனுப்பிய மெசேஜ்' - பறிபோன 179 உயிர்கள்
தென்கொரியாவில் தரையிறங்கிய விமானம் தடுப்பு சுவர் மீது மோதி வெடித்து விபத்துக்குள்ளான பதைபதைக்க வைக்கும் சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
தென் கொரியாவில் நிகழ்ந்த விமான விபத்தின் திக் திக் காட்சிகள்... விமான பயணம் மேற்கொள்ளும் பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது...
ஜேஜே ஏர் நிறுவனத்தின் விமானம் ஒன்றில் 175 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள் உட்பட சுமார் 181 பேர் பயணித்துள்ளனர்.
தாய்லாந்தில் இருந்து தென் கொரியா நோக்கி வந்த விமானம், போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட விமானம் எனக் கூறப்படுகிறது.
சரியாக தென்கொரியாவின் தென்மேற்கில் உள்ள முவான் சர்வாதேச விமான நிலையத்தில் பெல்லி லேண்டிங் முறையில் தரையிறங்கிய போது, நேரடியாக தடுப்பு சுவரில் மோதி வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது...
இதில் 179 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
இதுவரை விமானப் பணியாளர்களான 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விமான பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் தரும் துறையாகத் தென் கொரியாவின் விமானப் போக்குவரத்துத் துறை விளங்கும் நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
முதற்கட்டமாக விமான விபத்துக்கு, பறவை மோதியதே காரணமாக இருக்கலாம் என கூறப்படும் நிலையில், பறவை மோதியதாக விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் தனது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது..
அதில் தனது கடைசி வார்த்தையை சொல்லட்டுமா என பேசியதாக மனதை நொறுக்கும் தகவல்களும் வெளியாகியுள்ளது.
மேலும், விமானத்தின் ஓடுதளம் குறுகலானதாக இருந்ததாக சந்தேகிக்கப்பட்ட நிலையில், 2 ஆயிரத்து 800 மீட்டர் தொலைவிலான ஓடுதளம் தான் பயன்படுத்தப்பட்டு வருவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தீவிர விசாரணை மேற்கொண்டு, விரைவில் விபத்துக்கான காரணம் கண்டறியப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது...
இந்த விபத்தின் பரபரப்பு தணிவதற்குள், கனடா நாட்டை சேர்ந்த விமானம் தரையிறங்கிய போது தீ பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது..இதில் சில பயணிகளுக்கு காயம் மட்டும் ஏற்பட்ட நிலையில், பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இது மட்டுமன்றி அண்மையில், அஜர்பைஜான் நாட்டிற்குச் சொந்தமான விமானம் விபத்தில் சிக்கியது.
இப்படி அடுத்தடுத்த விமான விபத்துகளால் அச்சத்தில் உறைந்துள்ளனர் விமான பயணிகள்..