அதிநவீன படைகள்...வெறித்தனமான பவர் - இஸ்ரேல் Vs ஈரான் ராணுவ பலம் யாருக்கு?
த்திய கிழக்கில் இஸ்ரேல் - ஈரானில் உருமிக்கொள்ள இரு நாடுகளில் யாரிடம் அதிக ராணுவ பலம் உள்ளது என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
மத்திய கிழக்கில் இஸ்ரேல் - ஈரான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் அவர்களது ராணுவ திறனை கூர்மையாக கவனிக்க செய்கிறது.
சுற்றிலும் எதிரிகளை வந்துபார் என சவால் விடும் இஸ்ரேலிடம், 169,500 கள ராணுவ வீரர்களும், 465,000 ரிசர்வ் படையினரும் இருப்பதாக சர்வதேச மூலோபாய ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது.
இதுவே ஈரானிடம் 610,000 கள ராணுவ வீரர்களும், 350,000 ரிசர்வ் படையினரும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பட்ஜெட்டை பொருத்தவரையில் இஸ்ரேல் ஒதுக்கும் தொகை 19 பில்லியன் டாலர்கள், இந்திய ரூபாயில் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 630 கோடி. இதுவே ஈரான் ஒதுக்கும் தொகை 62 ஆயிரத்து 169 கோடியாகும்.
போரில் முக்கியமாக பார்க்கப்படும் வான்படையில், இஸ்ரேஸ் எஃப்-35, எஃப்-16 போன்ற அதிநவீன போர் விமானங்கள் உள்பட 612 போர் விமானங்களை கொண்ட சிறந்த விமானப்படையை கொண்டிருக்கிறது. நீண்ட தொலைவு பயணம் செய்து துல்லிய தாக்குதலை நடத்தும் வல்லமை கொண்டவை. மறுபுறம் ஈரானிடம் 551 விமானங்கள் இருந்தாலும், பல்வேறு தடைகள் காரணமாக நவீனமயமாக்கல் இல்லாமல் உள்ளன. ஈரான் ஏவுகணை, ட்ரோன் படையை வலுவாக்க கவனம் செலுத்தியிருக்கிறது.
இஸ்ரேலிடம் சுமார் 400 போர் டாங்கிகள், 530 பீரங்கி துப்பாக்கிகள் மற்றும் 1,190 கவச வாகனங்கள் உள்ளன. ஈரானிடம் 10,513 போர் டாங்கிகள், 6,798 பீரங்கி துப்பாக்கிகள் மற்றும் 640 கவச வாகனங்கள் இருப்பதாக IISS கூறுகிறது.
இரு நாடுகளும் தரை மற்றும் விமானப் படையோடு ஒப்பிடும் போது குறைந்த கடற்படை திறனையே கொண்டுள்ளன. இஸ்ரேலிடம் 5 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. 49 ரோந்து மற்றும் தாக்குதல் கப்பல்களை கொண்டுள்ளது. ஈரானிடம் 17 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. 68 ரோந்து மற்றும் தாக்குதல் கப்பல்களும், ஏழு சிறிய ரக தாக்குதல் கப்பல்களும், 12 தளவாடங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களும் உள்ளன.
ஈரானிடம் 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தகர்க்கும் SHAHAB 1 பாலிஸ்டிக் ஏவுகணை தொடங்கி, 2000 கிலோ மீட்டருக்கு அப்பால் எதிரியின் இலக்கை தகர்க்கும் SHAHAB 3 வரையில் பல்வேறு பாலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டிருக்கிறது. இஸ்ரேலிடம் 500 கிலோ மீட்டர் தொடங்கி 6,500 கிலோ மீட்டர் வரையில் இலக்கை தகர்க்கும் Jericho ரக ஏவுகணைகள் உள்ளன. குரூஸ் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணகளை கொண்டிருகிறது.
இதுபோக எதிரிநாட்டு ஏவுகணை, ட்ரோன்கள், ராக்கெட்களை எல்லாம் நடு வானிலேயே தூள் தூளாக்க இஸ்ரேலிடம் Iron Dome, David's Sling, Arrow 2, Arrow 3 வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் உள்ளன.
இஸ்ரேலிடம் சொந்த அணு ஆயுதங்கள் உள்ளதாக கருதப்படுகிறது. அணு ஆயுதங்கள் குறித்து வெளிப்படையாக பேசக்கூடாது என்பதை கொள்கையாக கொண்டிருக்கிறது இஸ்ரேல். அதேவேளையில் ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாக கருதப்படவில்லை. இருப்பினும் ஈரான் சொந்தமாக அணு ஆயுதங்கள் உருவாக்க முயல்வதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்படுகிறது
படை எண்ணிக்கை அளவில் ஈரான் பெரிதாக காணப்பட்டாலும், பெரும் நாசம் விளைவிக்கும் வகையிலான நவீன தொழில்நுட்ப ஆயுதங்களை இஸ்ரேல் கொண்டிருக்கிறது. அதுபோக அமெரிக்கா பக்கபலமாக இருக்க இஸ்ரேல் கையே ஓங்குகிறது. பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளன. ஈரானுக்கு ஆதரவாக லெபனான், ஏமன், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் குரல் கொடுப்பதையும் கவனிக்க முடிகிறது.